Home > Slider > மீறியபெத்த மக்களோடு மண்ணில் புதையுண்டுப் போன வாக்குறுதிகள்!

மீறியபெத்த மக்களோடு மண்ணில் புதையுண்டுப் போன வாக்குறுதிகள்!

துயரங்களைத் தாங்கிய மலையக வரலாற்றின் மற்றுமொரு துயர அத்தியாயமாக 2014.10.29 அன்று எழுதப்பட்ட அவலமே மீறிய பெத்த – கொஸ்லந்த மண்சரிவு அனர்த்தமாகும்.

தொடர்ந்தேர்ச்சியான மொன்சூன் மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட இந்த அனர்த்தம் சுமார் 190க்கும் அதிகமான மலையகச் சொந்தங்களை “தனக்கு உரமிட்டது போதும் தன்னோடு உரமாகுங்கள்” என தன்னகத்தே புதைத்துக் கொண்டது.

இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட ஒரு கிராமம் மண் மேடானது, நாடே சோகக்காடானது. பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், உறவுகளைத் தொலைத்த உயிர்கள், உயிரிழந்த உடல்கள் என அவலங்களை தாங்கி நின்ற தருணங்கள் இன்னும் மறக்காத சுவடுகளாய் உள்ளன.

அனர்த்தம் ஏற்படும் நிலை காணப்படுகின்றது என 2005ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆண்டுகளிலும் கூட எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்வதற்கும் அவர்களுக்குத் தேவையாக அடிப்படை வசதிகளைச் செய்துக் கொடுக்கவும் அப்போதைய தோட்ட நிர்வாகமோ அரசாங்கத்தின் கீழ் மட்ட முகவரான பிரதேச செயலாளரோ தயாராக இருக்கவில்லை.

சம்பவ தினத்திற்கு முதலும் கூட விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தவறியிருந்தமையும், அந்த தவறு மீறியபெத்த சொந்தங்களை மண்ணிற்கு இரையாக்கியதையும் நாம் மறந்து விடவில்லை.

அனர்த்தம் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் குறித்த பிரதேசத்திற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் உதவிகள் கிடைத்த வண்ணமிருந்தன. அத்தோடு வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தது.

எமது அரசியல் தலைமைகளும் ஆளுக்கால் முந்திக் கொண்டு அதை செய்வோம் இதை செய்வோம் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம், மற்றும் இறந்த மக்களுக்கான நினைவுத்தூபி நிர்மாணிப்பு தொடர்பான விடயங்கள் பிரதானமானவையாகும். இவை எந்தளவு சாத்தியப்பட்டிருக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய விடயமே. இதில் வீடமைப்புத்திட்டம் இன்னும் முழுமைப் பெறாத நிலையில், நினைவுத் தூபி தொடர்பான விடயம் சொன்னவர்களுக்கும் கூட மறந்து போய்விட்டது எனலாம்.

அறிக்கைகளை அளவில்லாது வீசிய கதைகளையும், அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கைகளையும் கடந்து சமகாலத்தில் மீறியபெத்தவில் நடப்பது என்ன? வீடமைப்பு திட்டத்தின் நிலைப்பாடு என்ன? நினைவுத் தூபி நிர்மாணித்தல் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இந்த பதிவிலே நோக்குவோம்.

முதலில் வீடமைப்பு திட்டம் தொடர்பில் நோக்குமிடத்து,

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் இன்றளவில் வீடுகள் எதுவும் கையளிக்கப்படவில்லை. எனினும் கையளிக்கப்பட வேண்டிய வீடுகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ்வீடுகளுக்கு மின்சார வசதியைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அனர்த்த நிலைமையின் போது வழங்கப்பட்ட உதவிகள் சில காலத்திலே நிறுத்தப்பட்ட பின்னர் மக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட முகாம்களிலிருந்தே தங்களது வாழ்விற்கு திரும்ப வேண்டியிருந்தது.

மாக்கந்த பூநாகலை எனும் பிரதேசத்தில் உள்ள பழைய தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் சிறு பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதும், அன்றாட வாழ்வினை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கழித்து வருவதும் பல சந்தரப்பங்களில் ஊடகங்களின் வாயிலாக அறியக் கிடைத்த ஒன்றே.

உண்மையில் இங்கு சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் அடிப்படை வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் பிரதான பிரச்சினையாக திகழும் அதே வேளை ஒழுங்கமைக்கப்படாத முறைமையின் காரணமாக பல கலாச்சார ரீதியிலானதும், குடும்பங்கள் ரீதியிலானதுமான சீரழிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருப்பதும் இங்கு மறைக்கப்பட்ட மறுப்பக்கங்களாக உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கென கட்டி முடிக்கப்பட்டு பெறுநர்கள் தீர்மானிக்கப்பட்ட இவ்வீடுகள் உண்மையாகவே மீறியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயமே.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படாது குறித்த பிரதேசத்தில் வாக்களர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்பட்டு இந்த வீடுகளை பெறுநர்கள் விபரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலருக்கு வீடுகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் இந்த வீடுகளின் கட்டுமாணப்பணிகளை கம்பனிகளுக்கு பொறுப்பளிக்காது அமைச்சினால் நேரடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பட்சத்தில் வீடுகளை மக்களுக்கு கையளித்து மாதங்கள் கடந்திருக்கும். ஆனால் இரண்டு வருடங்களாக இன்னும் முகாம்களில் வாழும் மக்களை வைத்து அரசியல் நடத்தி விட்டு எதிர்வரும் வாரங்களில் (22ஆந் திகதி) வீடுகளை கையளிப்பதற்கான செயற்பாடுகள் மிக வேகமாக நடந்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கையளித்து விட்டோம் என பிரச்சாரம் செய்துக் கொள்வதற்கோ இந்த இறுதிக்கட்ட அவசரம் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இந்த கையளிப்பு தொடர்பான விடயமும் வெறும் செய்தியாக மட்டுமல்லாது உண்மை கையளிப்பாக அமைய வேண்டும் ஏனெனில் அப்போது, இப்போது என மாறி மாறி சொல்லிய கையளிப்பு தினங்கள் பொய்யளிப்பு தினங்களாகி மக்களை ஏமாற்றிய தருணங்கள் பல.

எது எவ்வாறாயினும் ஏதோவொரு வகையில் நிறைவு செய்யப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் ஒருபுறமிருக்க அனர்த்தத்தினால் இறந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அனர்த்த நிலைமைகளின் போது அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அப்போதைய அதிகார திரமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழர் முற்போக்கு கூட்டணியிடமும் இவ்விடயம் தொடர்பில் மக்கள் தெரிவித்து நினைவுத்தூபி அமைப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி கோரியிருந்தனர். ஆனாலும் இன்று வரை நினைவுத் தூபி அமைக்கப்படுவதற்கு பொருத்தமான இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பதோடு அது தொடர்பான விடயங்களைக் கூட எமது தலைமைகள் மறந்து விட்டனர் எனினும் மறக்காத அல்லது மறக்கப்பட முடியாது வடு மாத்திரம் எம் மக்களின் மனங்களில் ரணமாய் இருக்கின்றது.

வீடமைப்புத் திட்டங்கள் எப்போது கையளிக்கப்படும் என்ற கேள்வியை சமீபத்தில் மலையக செய்தியாளர் ஒருவர் கௌரவ அமைச்சர் திகாம்பரம் அவர்களிடம் வினவிய போது இது தொடர்பில் எனக்கு தெரியாது உரிய அமைச்சோடு தொடர்புக் கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள் என்னிடம் கேட்க வேண்டாம் என பொறுப்பில்லாது பதிலளித்தமை மக்களின் நிலை தொடர்பில் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டினைக் காட்டுவதாக உள்ளது.

வீடமைப்புத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களிலும், அறிக்கை தெளிப்பு வைபவங்களிலும் வீறு நடைப்போட்டு விட்டு இப்போது எனக்கு தெரியாது எனச் சொல்வதில் எவ்வித நியாயமும் இருப்பதாய் தோன்றவில்லை.

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக வீடுகள் கையளிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னும் கையளிப்பு எப்போது என்பது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.

மலையகத்தைப் பொருத்தவரையில் இந்த தீபாவளி பண்டிகை என்பதில் இறந்தவர்களை நினைவுக் கூறும் தருணம் என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

குறிப்பாக தீபாவளி தினத்திற்கு முன்னைய நாள் இரவு வேளை அல்லது தீபாவளி தினத்தின் காலை வேளைகளில் இறந்தவர்களை நினைவுக் கூர்ந்து அதற்கான சாத்திர சம்பிரதாயங்களை செய்யும் வழக்கம் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு வாழ்வியலைக் கொண்ட மக்கள் மத்தியில் இந்த நினைவுத்தூபி என்ற அம்சம் அவர்களின் மனங்களிலே பாரிய மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த முடியும்.

அனர்த்த முன் ஆயத்த நிலைகளை உரியவாறு பின்பற்றாத நிருவாக செயற்பாட்டால் உயிரிழந்த மக்கள் மீள வரப்போவதுமில்லை, அந்த மீளாதுயர் எம்மகம் விட்டு அகழப்போவதுமில்லை.

புதையுண்ட உறவுகளை நினைவுகூர்ந்து எம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இதற்கு மில்லியன்களோ, பில்லியன்களோ செலவாவதில்லை.

இறந்தவர்களை நினைவுக்கூர்வதற்கு மட்டுமல்ல, எமது நாட்டின் நிர்வாகம் இயந்திரம் விட்ட பிழைகளின் வடுக்களை மறக்காது எடுத்துக் காட்டவும், அவ்வாறான தவறுகள் மீண்டும் எழாது பாதுகாக்கவும், ஏற்பட்ட அவலத்தை வரலாற்றில் பதியவும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பார்க்கும் ஒவ்வொரு பிள்ளையும் “எம்மை வைத்து பிழைப்பு நடத்திய அரசாங்கமும், அரசியல்வாதிகளும் வாக்கு கேட்கவும் அதன் பின்னர் சமாதிக்கட்டவுமே எம்மைத் தேடி வருவார்கள்” என்பதை உணர வேண்டும்;.

மண்சரிவு ஏற்பட்ட தருணங்களில் குறித்த இடத்திற்கு பெரும்பாலான அரசியல்வாதிகள் விஜயம் செய்தார்கள், எமது மலையகத்தின் சொல் வேந்தர்களும் அடிக்கடி சென்று கமராக்களின் முன்பாக மக்களை பார்வையிட்டனர்.

காலம் கடந்தது, வீடமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது கமராக்கள் இருந்தன தலைமைகள் விரைந்தனர். ஆனால் அதற்கு பின்னர் இந்த மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கின்றது, எத்தகைய பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்திருக்கின்றார்கள் என்பது தொடர்பில் எவரேனும் விஜயம் செய்து பார்த்தனரா என்றால் இல்லை. கௌரவ செந்தில்; தொண்டமான் அவர்கள் அவ்வப்போது விஜயங்களை மேற்கொண்டுள்ள போதும் அந்த விஜயத்தினால் விளைந்த பயன்கள் எதுவும் இல்லை. எது எவ்வாறாயினும் வேறு எவரும் மக்களின் நிலைத் தொடர்பில் நோக்க அங்கு செல்லவில்லை என்பதே நிதர்சனம்.

அன்றாட வாழ்வியலைக் கொண்டு நடாத்தவே பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் இந்த பிரதேச சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நோக்கினோமானால் கொப்பிகளையும், பென்சில்களையும் வழங்குவது மாத்திரம் இவர்களது கல்வி நடவடிக்கைகள்; பாதிக்கப்படாது கொண்டு நடாத்தப்பட போதுமானதல்ல.

இவர்களின் தங்குமிடங்களிலே இவர்கள் கற்பதற்கான சூழல் இருக்கின்றதா என்பதும், மனதளவில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உரிய ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றதா என்பதும் கேள்விக்குரிய விடயமே.

உண்மையில் அனர்த்தம் நிகழ்ந்த ஓரிரு மாதங்கள் அது தொடர்பான விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்ட போதும் அதன் பின்னர் அவை கவனத்திற் கொள்ளப்படாமையும் கவலைக்குரிய விடயமே.
உண்மை நிலை என்னவென்றால் அனர்த்தம் அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம், வரி விதிப்பு, பசில் ராஜபக்ச கைது, நாமல் ராஜபக்ச கைது, பாராளுமன்ற தேர்தல் என புதிய செய்திகளால் இந்த மீறியபெத்த அனர்த்தம் ஊடகப்பார்வையிலும் அரசியல்வாதிகளின் பார்வையிலும் மறைந்து விட்டது.

எனவே மறக்கப்பட்ட மக்களின் குரலாய்தான் இந்த மீறியபெத்த மக்களின் நிலை காணப்படுகின்றது. தேர்தல் காலமெனின் அரசியல்வாதிகளும் அவர்களது கமராக்களும் நொடிக்கொரு தடவை மீறியபெத்தவை நோட்டமிட்டிருக்கும் வாக்கு வலையும் வீசப்பட்டிருக்கும்.

அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்ற வேளையில் அதை வைத்து ஓரிரு மாதங்கள் அரசியல் நடத்துவதும், மீண்டும் இப்படி ஏற்படாதிருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏனைய பிரதேசங்களில் எடுப்போம் என அறிக்கை விடுவதும், மீண்டும் வேறெங்கும் அவ்வாறு அனர்த்தங்கள் ஏற்பட்ட உடன் மீண்டும் அதே அறிக்கையை விடுவதும் இவர்களுக்கு வழக்கமாகி விட்டது. இதற்கு மீரியபெத்தவை தொடர்ந்து அரநாயக்கவில் ஏற்பட்ட அனர்த்தம் ஒரு உண்மைச் சான்றாகும்.

மீறியபெத்தவில் அள்ளி வீசப்பட்ட அதே அறிக்கைகளின் பிரதிகள் இங்கும் அள்ளி வீசப்பட்டமை யாவரும் அறிந்ததே. ஆனால் அரநாயக்கவில் அவ் அறிக்கைகள் விடப்படும் போது மக்களும் அதனை புதிய ஒன்றாகவே பார்;;த்தனர் காரணம் மீறியபெத்த அவலங்களையும் அப்போதைய அறிக்கைகளையும் மக்களும் மறந்து விட்டனர். பழையதை மறப்பது ஒன்றும் எம்மக்களுக்கும், எம் தலைமைகளுக்கு புதியதல்லவே.

உண்மையில் இந்த மக்களுக்கு உரிய தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டுமா தவறியிருக்கின்றனர் என நோக்கின் அவர்களோடு சேர்த்து ஊடகவியலாளர்களான நாமும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஆமாம் அனர்த்தம் நடந்த போது முந்திக் கொண்டு செய்திகளை வழங்கினோம் சில காலங்களுக்கு பேசினோம், புதிய செய்திகளால் நாமும் மறந்து விட்டோம்.

செய்திகளை தொடர்ந்து படம்போட்டு காட்டி, எமது கமராக்களுக்கு முன்பாக வீசப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் நினைவுக்காட்டி அவை உரிய முறையில் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு உந்து சக்தியை வழங்க வேண்டிய கடமையும் எமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது. விபத்து எப்போது ஏற்படும் உடனே அது தொடர்பான செய்தியை வெளியிட வேண்டும் என்பதல்ல எமது பணி, மக்களுக்கு தேவையான செய்தியையும், செய்தியின் விளைவுகளையும் பெற்றுப் கொடுப்பதாக எமது பணி அமைய வேண்டும்.

எவர் மறந்தாலும் மண்ணுக்குள் மாண்டு வருடங்கள் இரண்டு கடந்த போதும் உறவுகளை இழந்த உயிர்களின் ஓலம் இன்று வரை மாறவில்லை. உறவுகளை இழந்த துயர் ஒரு புறம் அன்றாட சீவியம் மறு புறம் என வேதனைகள் சூழ வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு உரிய தீர்வு இனியும் தாமதிக்காது வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சொந்த பிரசித்திக்காக மாத்திரம் அரசியல் நடத்தும் எண்ணம் ஒழிக்கப்பட்டு, அவ்வெண்ணம் மக்கள் நல்வாழ்வுக்காகவென மாற்றப்பட வேண்டும். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாவது வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டு அவர்கள் புது வாழ்வொன்றை தொடக்க வழி செய்ய வேண்டும். அதே போலவே இறந்தவர்களை நினைவுக் கூர்வதற்கான நினைவுத் தூபியும் அமைக்கப்பட வழிவகைகள் கூடிய விரைவில் செய்ய வேண்டும். (விரைவு என்பது இன்னுமொரு இரண்டு வருடமல்ல). இன்று நாளை என்று ஏமாற்றியது போதும் மலரும் தீபத்திருநாள் எம் மக்கள் வாழ்வில் புது ஒளி ஏற்றிட வழிவகை செய்திட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இம் மக்களும் இலங்கை பிரஜைகளே. அரசியல்யாப்பின் அரசக் கொள்கை வழிகாட்டல் தத்துவம் காட்டும் வழியில் இவர்களது சமூக நலன் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயமன்றோ. அரசியல்யாப்பு குறிப்பிடும் குறிக்கோள்களில் மிகப் பிரதானமானது “போதிய உணவு, உடை, வீட்டு வசதி, வாழ்க்கை நிலைமைகளில் தொடர்ச்சியான சீர்த்திருத்தம், ஓய்வு நேரத்தை முழுமையாக துய்த்தல், சமூக கலாச்சார வாய்ப்புக்கள் என்பன உட்பட எல்லா பிரசைகளும் அவர்களது குடும்பத்தினரும் போதியளவு வாழ்க்கை தரத்தை அனுபவித்தல்” என்பதாகும்.

இவ் வழிகாட்டல் தத்துவத்தை கட்டாயம் அரசு செயற்படுத்த வேண்டும் என வலியுருத்த முடியாவிடினும் அதனடியொட்டி மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவ வேண்டியது அரசின் கடமையே.

எனவே இதனையும கருத்திற்கொண்டு மீறியபெத்த மக்கள் உள்ளிட்ட அனைத்த மலையக மக்களினதும் வாழ்க்கைத் தர உயர்விற்கு உதவிப் புரிய வேண்டியது இலங்கை ஜனநாயக (?) சோசலிஸ குடியரசின் கடமையும் பொறுப்புமாகும்.

தனுஷன் ஆறுமுகம்
சட்ட பீடம்

Leave a Reply

error: Content is protected !!