Home > கட்டுரை > சமூகம் உதவினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களும் அவர்கள் குடும்பங்கள் மட்டுமல்ல சமூகமும் நன்மை பெறும்!

சமூகம் உதவினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களும் அவர்கள் குடும்பங்கள் மட்டுமல்ல சமூகமும் நன்மை பெறும்!

இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நூற்றாண்டு காலமாக உழைத்த பெருந்தோட்ட மக்கள் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாகி 1970 ஆண்டுகளில் புனர்வாழ்வு என்ற பெயரில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
ஒவ்வொரு புதன்,வெள்ளிக் கிழமைகளிலும் மலைநாட்டுப் பகுதியிலுள்ள புகையிரத நிலையங்களிருந்து புனர்வாழ்வு பெற்று மக்கள் புறப்பட்ட போது அவர்களினதும் அவர்களை வழியனுப்ப வந்த உறவினர்களினதும் கண்ணீரும் அழுகுரலும் புகையிர நிலையங்களை மட்டுமல்ல அந்ததந்த நகரங்களையும் மரணவீடுகள் போன்ற ஒரு காட்சியையே உருவாக்கின.
அதனை இப்போதும் மறக்க முடியாது. இவ்வாறு புனர்வாழ்வு பெற்றவர்கள் தோட்டங்களை விட்டு புறப்பட்ட போது எல்லா மக்களும் சேர்ந்து ஒரே குடும்பமாக அவர்களுக்கு கோயில்களில் விசேட பூஜை நடத்தி பிராத்தனை செய்து அவர்களை வழியனுப்பினார்கள்.
எல்லோருக்கும், நாமெல்லோரும் ஒரு குடும்பம். எல்லோரும் நம்மவர்கள் என்ற நல்லெண்ணம் இருந்தது.
அவர்களுக்கு இருந்த ஒரே நிம்மதி தமது தாய் நாட்டுக்கு, தமது உறவினர்களிடம் ,தமது சொந்த மொழியை பேசும் மக்களிடம் போகிறார்கள் என்பதாகும்.
ஆனால் இப்போது காலம் மாறி வேறு ஒரு காட்சி வந்திருக்கிறது. பெருந்தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் நமது குடும்பத்தையும் பிள்ளைகளையும் அபிவிருத்தி செய்ய முடியாது என்ற நிலையில் பெருந்தோட்டங்களிலிருந்து பெரும்பாலனவர்கள் அதிலும் பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இந்தியாவை விட அதிக தூரத்திலுள்ள , எந்த வித உறவினரும் இல்லாத, மொழி, பழக்கமோ தெரியாத மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்கள்.
அங்கு அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் , துயரங்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உயிருடன் சென்று சடலங்களாக திரும்பி வந்ததை பார்க்கிறோம்.
இத்தனை துயரங்களுக்கும் மத்தியில் அவர்களே இந்த நாட்டுக்கு அதிகளவு அந்நிய செலாவாணியை கொண்டு வருகிறார்கள்.
ஒரு வருடத்தில் மட்டும் அவர்கள் சுமார் 6 பில்லியன் டொலர் பணத்தை நாட்டுக்கு அனுப்புகிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக மட்டுமே உழைக்கிறார்கள் என்ற நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் நாட்டின் அபிவிருத்திக்கு பயன் படுகிறது.
கல்வி, சுகாதாரம் , உட்பட அனைத்து விடயத்திலும் அவர்கள் அனுப்பும் பணம் பங்களிப்பு செய்கிறது.
அது மட்டுமா சுமார் 20 இலட்சம் பேர் இப்படி வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
இவ்வளவு வேலை வாய்ப்பை உள்ளுரில் நாம் எற்படுத்தி கொடுக்க முடியுமா? இவர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கே இருந்தால் நமது நாட்டில் வேலையில்லாத பிரச்சனை எவ்வளவு பாரதூரமாக இருக்கும்? இவர்கள் வெளிநாடு சென்றதால் தான் எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளக்கும் ஏதோ ஒரு வகையில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நாம் சிந்தித்து பார்த்தது உண்டா?
ஆனால் நமது நாட்டுக்கும் தமது குடும்பத்திற்கும் இவ்வளவு நன்மை செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் குடும்பங்களை நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம்.
அவர்கள் குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் போது நாம் அவர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை. அவர்கள் திரும்பி வரும் போது அவர்கள் திரும்பவும் சமூகத்தில் மீள இணைந்து கொள்வதற்கு நாம் உதவுவதில்லை.
நாளை நமது குடும்பத்தில் இருந்து கூட ஒருவர் வெளிநாடு சென்றால் நமது குடும்பத்தின் நிலைமை என்னவாகும.;
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்கள் நாட்டுக்கும் தமது குடும்பத்திற்கு பெரும் நன்மை செய்கிறார்கள்.
நமது நாட்டுக்கு பெரும் அந்நிய செலாவாணி கொண்டு வருகிறார்கள். இதனால் முழுநாடும் அரசங்கமும் நாமும் நன்மை அடைகிறோம்.
அவர்கள் வெளிநாடு செல்வதால் நம் நாட்டில் வேலையில்லா பிரச்சனை பெருமளவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தனை நன்மை செய்யும் இவர்களுக்கு இவர்களின் குடும்பங்களுக்கும் நாம் உதவி செய்வது நமது கடமை என்பதனை நாம் உணரவேண்டும்.
புனர்வாழ்வுக்காக இந்தியா சென்றவர்களுக்காக விசேட பூஜையும்,பிராத்தனை செய்த சிறப்பான சமூக உணர்வும் சரித்திரமும் நம்மிடம் இருந்திருக்கிறது. இப்போது தமது குடும்பத்தை பிரிந்து கண்காணாத தேசத்துக்கு பெரும் ஏக்கத்தோடும் ஆதங்கத்தோடும் செல்லும் அவர்களை நமது தோட்ட ஆலயங்களில் அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்க்காவும் விசேட பூஜைகள் நடத்தி அவர்களுக்காக தெய்வத்தின் ஆசியும் பாதுகாப்பும் வேண்டி உற்சாகப்படுத்தி அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
எங்கள் குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வோடு அவர்கள் செல்வது அவர்களுக்கு எவ்வளவு மன நிம்மதியை தரும் என்பதை சிந்தியுங்கள்.
நாளை நமது குடும்பத்திலிருந்து ஒருவர் வெளிநாடு சென்றால் இந்த பாதுகாப்பும் நிம்மதியும் நமக்கும் நம் குடும்பத்திற்கும் கிடைக்கும் அல்லவா? இவ்வாறு முழு சமூகமும் இந்த விடயத்தில் ஈடுபடும் போது சமூகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று செல்பவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
என்பதை அறிந்து மோசடி செய்யும் தரகர்கள் கூட மக்களை ஏமாற்றுவற்கு முன்னர் பலமுறை சிந்திக்கும் நிலையை நாம் ஏற்படுத்தலாம்.
இப்போது பிரிடோ நிறுவனம் சிறுவர் குழுக்கூட்டங்களில் வெளிநாடு சென்றவர்களுக்காக பிராத்தனை செய்யும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதனால் வெளிநாடு சென்றவர்களின் குடும்பங்களில் தங்கள் உறவினர்களுக்காக பிரார்த்திக்கும் பழக்கமும் வந்திருக்கிறது.
இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்பிலுள்ளோருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நாமும் நமது நாளாந்த சமயவழிபாட்டிலும்,வெள்ளிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை கோயில்களிலும் பிராத்தனை செய்வதை ஒரு வழக்கமாக ஏற்படுத்தவேண்டும்.
இதே போன்று வெளிநாடு சென்றவர்கள் திரும்பி வரும் போது அவர்களை சமூகத்திற்குள் வரவேற்க நாம் கோயில்களில் பூஜை நடத்தும் பழக்கத்தை ஏற்படுத்தினால் திரும்பி வருபவர்கள் சுமூகமாக சமூகத்தில் மீள இணையும் வாய்ப்பு ஏற்படும்.
ஏற்கனவே பிரிடோ நிறுவனம் பணிசெய்யும் ஒரு சில தோட்டங்களில் இந்த பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதைவிட வெளிநாட்டு வேலைவாயப்பில் உள்ள குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் பாடசாலை செல்கிறார்களா? அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? நன்கு கவனிக்கப்படுகிறார்களா? அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள தாத்தா பாட்டிமர்களுக்கு உதவி தேவையா என்ற விடயங்களை சமூகம் தேடிப்பார்க்க வேண்டும். இவ்வாறான குடுமபங்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு கிராம சேவகர்கள், சமுர்த்தி;, சிறுவர் உரிமை மேம்பாட்டு;, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி;. உத்தியோகஸ்தர்கள் ஏன் போலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களின் உதவியை பெற்றுக்கொடுக்க நாம் தலையீடு செய்யலாம்.
பிரிடோ நிறுவனம் பணி செய்யும் பகுதிகளில சிறுவர் பாதுகாப்புக்குழுக்களை அமைத்து வருகிறது . அந்த குழுக்களின் அல்லது பிரிடோ முன்பள்ளி ஆசிரியைகளின் கவனத்திற்கு நாம் கொண்டு வரலாம்.
அதே போன்று வெளிநாட்டு வேலைவாய்பில் உள்ள குடும்பங்களில் உள்ளோhர் பல்வேறு உளரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். மேற்கண்டவாறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்;ட அரச அதிகாரிகளின் அல்லது பிரிடோ நிறுவன பணியாளர்களின் உதவிகளை பெற்றுக்கொடுக்கலாம.இது நமது சமூகம் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு உதவுவது நமது சமூகக்கடமை என்பதை நாம் உணர்ந்தால் அவர்கள் மாத்திரமல்ல நமது முழு மலையக சமூகமும் நன்மை அடையும்.
வேளிநாட்டு வேலைவாய்ப்;புக்கு சென்றவர்களுக்கு உதவுவது ஒரு சமூகக்கடமை என்ற விடயம் பொதுவாக எவாராலும் வலியுறுத்தப்படுவில்லை.
இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றால் நமது நாட்டிலுள்ள பல்வேறு கிராமங்களில் மட்டுமல்ல அரசாங்கமும் கூட இந்த அணுகுமுறையை பரீட்சித்துக்பார்க்கக்கூடிய ஒரு முன்மாதிரியான திட்டமாக இது அமையும். இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் உள்ளது என்பதை முழு உலகிற்கும் ஒரு புதிய புரட்சிகரமான செய்தியாக கொண்டு செல்ல எங்களால் முடியும். சரித்திரம் படைப்போம் வாருங்கள்.
அக்கரபத்தனை நிருபர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!