Home > மலையகம் > சட்ட உதவி ஆணைக்குழு மலையகத்தில் செயலாற்ற முன்வந்துள்ளது அதை பயன்படுத்துங்கள்; திலகர் எம்பி!

சட்ட உதவி ஆணைக்குழு மலையகத்தில் செயலாற்ற முன்வந்துள்ளது அதை பயன்படுத்துங்கள்; திலகர் எம்பி!

உரிமைசார், அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் சார்ந்து மாத்திரமல்ல சட்டம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் மலையக சமூகத்துக்கு இருக்கிறது. எனது பாராளுமன்ற உரையினை செவிமடுத்த இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு இன்று மலையகத்தில் ஆலோசனைச் செயலமர்வுகளை நடாத்த முன்வந்துள்ளது.

எனினும் அவர்களது குறைந்த அளவான நிதியினைக் கொண்டு முழுமையான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஆனால் இவர்களுடன் கைகோர்த்து மலையக சட்டத்தரணிகள் மக்களுக்கான ஆலோசனை சேவையை மலையகமெங்கும் தன்னார்வ தொண்டாக முன்னெடுக்க முடியும். அதற்கான களம் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோர் கையாள வேண்டிய சட்ட நடைமுறைகள் தொடர்பான சட்ட ஆலோசனை செயலமர்வு பொகவந்தலாவை பிரிடோ சிறுவர் கல்வி பயிற்சி நிலைய மண்டபத்தில் அதன் இணைப்பாளர் எஸ்.கே. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயலமர்வை தொடங்கிவைத்து ஆரம்ப உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி நான் பல்வேறு பிரேரணைகளை முன்வைத்தும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டும் உரையாற்றத் தொடங்கியபோது பல்வேறு அதிர்வலைகள் உருவாகின. பாராளுமன்றில் மலையக பிரச்சினைகள் பேசப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க பாராளுமன்றில் பேசிப்பயனில்லை நாங்கள் நேரடியாக நாட்டுத் தலைவர்களுடன் பேசி தீர்ப்போம் என நியாயமும் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் என்பதே மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கான களம்தான். அதனால்தான் அங்கு ஒவ்வொருவருக்கும் ஒலிவாங்கி பொறுத்தப்பட்டிருக்கிறது.

உறுப்பினர்கள் தங்களுக்கு பேசுவதற்காக நேரம் ஒதுக்கப்படவில்லை என முறைப்பாடு தெரிவிக்கிறார்கள். நான் கடந்த ஓராண்டு காலமாக எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல உரைகளை ஆற்றியிருக்கிறேன்.
பல பிரேரணைகளை முன்வைத்தும் உரையாற்றியிருக்கிறேன்.புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் மலையக இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் அவசியம் குறித்து ஆற்றிய உரையின் பயனாக இன்று சட்ட உதவி ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.

சட்ட உதவி ஆணைக்குழு குறைந்த நிதி ஒதுக்கீடுகளுடன் இயங்கும் அரச ஆணைக்குழு.எனினும் அவர்கள் இத்தகைய செயலமர்வுகளை நடாத்த முன்வரும்போது மலையக சட்டத்தரணிகள் தன்னார்வ தொண்டர்களாக முன்வந்து தமது சட்ட ஆலோசனைகளை மக்களுக்கு பணியாற்ற முடியும்.

தமது சட்ட அறிவைக் கொண்டு சமூக பணியாற்றும் சந்தர்ப்பமாக அதனைக் கொள்ள முடியும். கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சட்டத்தரணி இ.தம்பையா வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக இன்று செய்திகளில் படித்து என்னுடைய முகநூலில் கூட பகிர்ந்திருக்கிறேன். சமூகத்துக்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய பணி ஏராளமாக இருக்கிறது. அதனை ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் செய்ய முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளிடமே தீர்வு தேட முற்படக்கூடாது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல செயலமர்வுகளை நடாத்த சட்ட உதவி ஆணைக்குழு தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!