Home > கட்டுரை > சந்திரசேகரன் என்ற சகாப்தத்தின் நினைவுதினம்! (சிறப்பு கட்டுரை)

சந்திரசேகரன் என்ற சகாப்தத்தின் நினைவுதினம்! (சிறப்பு கட்டுரை)

சந்திரசேகரன் என்ற சகாப்தத்தின் நினைவுதினம் – 01.01.2017
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது என்ற கூற்றை உண்மையாக்கிய மலையக படைப்பாளி அமரர் பெ.சந்திரசேகரனின் 7 வது சிரார்த்த தினம் புத்தாண்டு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதியாகிறான். அடுத்த சந்ததியைப் பற்றி சிந்திப்பவன் தலைவனாகிறான்.என்று எழுத்தாளர் சோ குறிப்பிட்டது போல சந்திரசேகரன் தன் அடுத்த சந்ததிக்கான விடிவுக்கான அடித்தளத்தை அர்த்தத்தோடு இட்டு சென்றுள்ளார்.
தன்னிடம் இருப்பதை தன்னலம் கருதாது பகிர்ந்துகொள்பவன் தான் வள்ளலாகின்றான். தனது செல்வங்களையோ சொத்துக்களையோ பிறருக்கு தானம் செய்வதற்கு சமமாக தன்னையும், தனது கொள்கைகளையும் தான் சார்ந்த மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக அர்ப்பணம் செய்பவனும் ஒரு வகையில் வாரி வழங்கும் வள்ளலாகின்றான். தன் சமூக அவலங்களைக் கண்டு சந்திரசேகரன் அவதானியாக மாத்திரம் இருக்கவில்லை. அல்லது விமர்சனம் செய்து கொண்டு அதன் பொறுப்புக்களை ஏனையவர்கள் மீது சுமத்திவிட்டு பார்வையாளராக இருக்கவில்லை. அல்லது நீங்கள் உங்கள் உரிமைக்காக போராடுங்கள். என்று கூறிவிட்டு ஒதுங்கியும் இருக்கவில்லை. என் பின்னால் வாருங்கள் என்று கூறித்தான் தனது சேவைகளை தொடர்ந்தார்.தனது இருபது வயதிலேயே தன் சமூகம் சார்ந்த அவலங்களுக்கு குரல்கொடுக்க ஆரம்பித்தபோது, அவருக்கு அரசியல் பின்புலமோ, பொருளாதார பலமோ அல்லது கட்சி என்கிற அமைப்போ இருக்கவில்லை.
ஆனால் உண்மை, உழைப்பு, கொள்கையில் உறுதி போன்ற திடமான குணாம்சங்களும் இவரை நேசித்த உண்மையான உள்ளங்களின் பங்களிப்பும் இவருக்கு பலமாக பின்புலமாக நின்றன. எவ்வளவுக்கெவ்வளவு போராட்டக்குணமுள்ளவராக இருந்தாரோ அதையும் மிஞ்சிய மனிதாபிமான மிக்க மென்மையான குணாம்சங்களையும் கொண்டிருந்தார்.

இவரை எதிர்த்துவருபவர்களும், தர்க்கம் செய்ய வருபவர்களும் இவரது புன்சிரிப்புமிக்க கனிவான பார்வையில் பெட்டிப்பாம்பாகிவிடுவார்கள்.வீரனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜமே. ஆனால் உண்மையான வீரன் தோல்வியை தவிர்த்துக்கொள்வான். அல்லது தோல்வியை படிப்பினையாக்கிக் கொள்வான்.சந்திரசேகரன் தோல்விகளுக்கும் சதிகளுக்கும் முகம் கொடுக்காமல் இருக்கவில்லை.

அவர் எடுத்த எல்லா நடவடிக்கைகளும் அவருக்கு தடைகளில்லாத வெற்றியை தரவில்லை.

முதல் அடியை எடுத்து வைக்கும் குழந்தை பலமுறை விழுந்து விழுந்து எழுவது போன்றே அவரும் தனக்கெதிரான சதிகளையும் தடைகளையும் இலாவகமாக வென்றார்.80களில் பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கு அவர்களின் அனைத்து தேவைகளிலும் சத்திய கடதாசி மிக அவசியமாக இருந்தது. எந்த ஒரு தஸ்தாவேஜுகளும் இல்லாத நிலையில் சத்திய கடதாசி ஒன்றை தயாரித்துக் கொள்வதிலும் அதனை சமாதான நீதவான் ஒருவரிடம் உறுதி செய்து கொள்வதிலும் எமது மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தார்கள்.

அக்கால கட்டத்தில் இ.தொ.கா வின் அரசியல் அமைப்பாளராகவும் தலவாக்கலை நகரசபை உறுப்பினராகவும் இருந்த இவர் ஒரு சமாதான நீதவானாகவும் இருந்தமை பெருந்தோட்டத்துறை மக்களுக்கு மிகப்பெரும் நிவாரணமாக இருந்தது.தமது சொந்த பிரச்சனைக்காக இவரை நாடிவந்தவர்கள், தமது குடும்பப் பிரச்சனைகளை கூற, பின்னர் தோட்டப் பிரச்சனைகளை கூற, அது படிப்படியாக வளர்ந்து மாணவர்களின் கல்வி பிரச்சனை, பொலிஸ் பிரச்சனை, சமூகப் பிரச்சனை என்று மக்கள் இவரை காண வருவது அதிகரித்தது. டயகம, பூண்டுலோயா, கொட்டக்கலை போன்ற பகுதியிலிருந்தெல்லாம் வந்த இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள், உத்தியோகத்தவர்கள் அனைவரும் இவரை அண்ணன் என்று வயது வேறுபாடின்றி அழைக்க ஆரம்பித்தார்கள்.

“தம்பி உள்ளவன் சேனைத் தளபதியாவான்…” என்ற பாடல் வரிக்கேற்ப பல்லாயிரம் தம்பிகள் ஒன்றிணைந்து இவரை சமூக தளபதியாக்கினார்கள்.

இவரிடமிருந்து வாசிப்பு திறமையும் ஆர்வமும் அபாரமானவை. தினசரி பத்திரிக்கைகள், இந்தியவெளியீடுகள், தத்துவார்த்த, சமயம் சார்ந்த, விஞ்ஞான ஆய்வு சம்மந்தமான, மனோ தத்துவம் சம்மந்தமான படைப்புக்கள் மட்டுமின்றி நகைச்சுவை வெளியீடுகள், சினிமா சார்ந்த விடயங்கள் அனைத்தையுமே வாசிக்கும் பழக்கங்கள் இவருக்கு இருந்தது. சர்வதேசம் தழுவிய போராட்ட வரலாறுகளை ஆர்வமுடன் வாசித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்.நோயின் அடிப்படை தன்மையையும் நோயாளியின் உண்மையான உடற்தகுதிகளையும் தெரிந்துக்கொள்ளும் வைத்தியரால்தான் நோய் தீர்க்கும் சிகிச்சையை வழங்கமுடியும்.

அல்லது அது நிவாரணமான சிகிச்சையாகிவிடும் என்பதை போல எமது சமூக பின்னடைவுக்கான அடிப்படை காரணிகளை சந்திரசேகரன் கண்டறிந்து செயற்பட்டார். பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களை விடவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் பெரும்பான்மை இன மக்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்தாலும் கூட சமூக அந்தஸ்த்து என்ற அளவீட்டில் இம்மக்கள் மலையகத்தவர்களை விட மதிப்பு பெற்றுள்ளதை இவர் ஆராய்ந்தார். தங்களுக்கு சொந்தமான ஒரு குடிசையாவது இருப்பதால்தான் கிராமத்தில் வாழும் மக்கள் ஏழ்மையிலும் நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்.

ஆனால் வசிக்கும் லயன் அறை, வீட்டுத்தோட்டம் அல்லது அதில் வளரும் மரங்கள் இவை அனைத்தும் நிர்வாகத்துக் கட்டுப்பட்டதாக உள்ள நிலையில் தொழிலாளர்களால் நம்பிக்கையோடு வாழவே முடியாது என்று கூறிய சந்திரசேகரன், இதனை தகர்க்கும் முதல் நடவடிக்கையாகத்தான் தனிவீடமைப்புத்திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.
தனக்கான சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பிக்கும் போது தான், ஒருவன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் கொள்கிறான் என்பது இவர் நிதர்சனமாக்கிய உண்மை. லயத்து வாழ்க்கைதான் எமது சமூக தேக்கத்துக்கான அடிப்படை காரணி என்பது இன்று சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.தொழிலுக்காக மாத்திரமே தோட்ட நிர்வாகத்தில் தங்கியிருக்க வேண்டுமென்பதும் அது தவிர்ந்த ஏனைய அனைத்து தேவைகளும் அரச கட்டமைப்பின் ஊடாக தொடர்புபடுத்தப்பட்டால்தான் எம் சமூகத்தினர் மத்தியில் தங்கியிருக்கும் எண்ணம் மாறும் என்ற அடிப்படையில் தான் பெருந்தோட்டத்துறையில் தமிழ் கிராமசேவகர்கள் நியமனத்தை ஊக்குவித்தார்.ஒரு தனி நபர் அல்லது தலைவன் புகழை தேடிச்செல்லவேண்டுமாபுகழை தேடிச்செல்லவேண்டுமாயின் அதற்கு பொருளாதார வளம் இருந்தால் போதும்.

ஆனால் ஒருவரை புகழ் தேடி வர வேண்டுமாயின் அங்கு நேர்மையும் சேவையும் இருக்க வேண்டும். சந்திரசேகரனும் தனது நேர்மையான சேவையின் ஊடாகவே மக்கள் தலைவனாகினார்.இயற்கை அனர்த்தங்கள், போராட்டங்கள், வன்முறைகள் அல்லது கசப்புணர்வுகள் இவைகள் காலத்தால் மறக்கப்படும். இவ்வாறான நிகழ்வுகள் மறக்கப்படாமல் இருந்தால் மனித வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். ஆனால் கருத்துக்கள் எக்காலத்திலும் மறையாது. அவை நூற்றாண்டுகள் கழித்தும் வாழும்.சந்திரசேகரன் மட்டுமல்லாது இவரைப்போன்ற உண்மையான சமூக வழிகாட்டிகள் விட்டுசென்ற கருத்துக்களும், தியாகங்களும் என்றும் வாழும்.

கேதீஸ்

 

Leave a Reply

error: Content is protected !!