Home > மலையகம் > தோட்டப்பகுதிகளை அபிவிருத்தி செய்ய புதிய திட்டம் – ஆறுமுகன் எம்பி தெரிவிப்பு!

தோட்டப்பகுதிகளை அபிவிருத்தி செய்ய புதிய திட்டம் – ஆறுமுகன் எம்பி தெரிவிப்பு!

 

பெருந்தோட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்தவகையில் முதல் முறையாக டயகம பிரதேசத்தை இலக்காக கொண்டு டயகம பிரதேசத்தில் உள்ள தோட்டங்களை ஒரு வருட காலத்தில் முழுமையான அபிவிருத்தியை செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தோட்ட பகுதிகளில் 49 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான மூன்று அரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 07.01.2017 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு சிறுகசிறுக பொருட்களை கையளிப்பதும் தோட்டப்பகுதிகளின் அடிப்படை தேவைகளை பகுதி பகுதியாக முன்னெடுப்பதும் சிறந்ததாக அமையவில்லை.

ஆகையினால் தற்பொழுது திட்டம் ஒன்றை காங்கிரஸ் வகுத்துள்ளது. இதனடிப்படையில் தோட்டப்பகுதிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கென வழிவகை ஒன்றை கையாள உள்ளோம்.

அதற்காக டயகம பிரதேசத்தை இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக தேர்வு செய்துள்ளோம். அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அப்பகுதி தொடர்பில் அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்று இப்பகுதிகடகான முழுமையான அபிவிருத்தி திட்டத்தை ஒரு வருட திட்டமாக செயல்படுத்தி பூர்த்தியாக்கவுள்ளோம் என தெரிவித்த அவர். இது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிதாக வகுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் ஊடாக ஒரு பிரதேசத்தை முழுமையாக பெற்று அதன் அபிவிருத்தி பணிகளை ஒரு வருட காலப்பகுதிக்குள் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாட்டு சபையின் விதிமுறைகள் காணப்படுகின்றது. இவ்விதி முறைகளின் அடிப்படையில் அபிவிருத்தி பணிகள் செய்யும் பொழுது வெற்றிக்கிடைக்கும் என்பது உறுதி.

பொதுவான திட்டம் ஒன்றை ஒரு தோட்டப்பகுதியில் எடுக்கும் பொழுது அங்கு வீதிகள் மற்றும் தொலைதொடர்பு வசதிகளை செய்துக்கொடுக்கும் பட்சத்தில் பாதி வேலைத்திட்டங்கள் முடிவடையும்.

இன்றைய இளைஞர்கள் தேக ஆரோக்கியத்தடன் செயலாற்ற அன்று முதல் இளைஞர்களை விளையாட்டுதுறையில் இ.தொ.கா ஊக்குவித்து வருகின்றது. அந்தவகையில் தொடர்ந்தும் விளையாட்டுகளில் முன்னேற அரசாங்கத்தால் கொடுக்கும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கழகங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வழியுறுத்துவதுடன் பதிவு செய்தல் கழகங்கள் ஊடாக நிறைய திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது பெரும்பான்மையினருக்கு சரிசமமாக வாழக்கூடிய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!