Home > மலையகம் > தலவாக்கலை தைப்பொங்கல் விழாவில் மாணவர்களை பங்குபற்ற வைக்கும் முயற்சிக்கு ஸ்ரீதரன் எதிர்ப்பு!

தலவாக்கலை தைப்பொங்கல் விழாவில் மாணவர்களை பங்குபற்ற வைக்கும் முயற்சிக்கு ஸ்ரீதரன் எதிர்ப்பு!

தலவாக்கலையில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தைப்பொங்கல் விழாவில் நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஊர்வலத்தில் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ள பொங்கல் விழாவுக்கு நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த 12 பாடசாலைகளின் மாணவர் குழுக்களை பங்கு பற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண மேலதிகக் கல்விப்பணிப்பாளர் ஒருவர் குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

விடுமுறை நாட்களில் பாடசாலை மாணவர்களை பொது நிகழ்வுகளில் பங்கு பற்ற வைக்கக்கூடாதென்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. எனினும் இதனை மீறி மத்திய மாகாண மேலதிகக் கல்விப்பணிப்பாளர் அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தலவாக்கலை தைப்பொங்கல் நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கு பற்றவைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக என்பது குறித்து மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் நுவரெலியா வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாம் அவ்வாறான அனுமதி வழங்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர்.

எனவே தமது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்கின்ற மத்திய மாகாண மேலதிகக் கல்விப்பணிப்பாளர் மற்றும் குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

error: Content is protected !!