Home > மலையகம் > தொடர்ந்து சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம்!

தொடர்ந்து சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம்!

நீண்டகாலம் ஒரே பாடசாலையில் அதிபர்களாக சேவையாற்றுபவர்களை சுழற்சிமுறையில் இடமாற்றம் செய்வதோடு அதிபர்கள் வெற்றிடம் காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களை நியமிக்க வேண்டும் என மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பீதுறுகாலதால மலை அடிவாரத்தின் கீழ் காணப்படுகின்ற நானுஓயா பிரதேசத்திற்குட்பட்ட கஸ்ட பிரதேச பாடசாலைகள் மற்றும் நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியை அண்மித்து காணப்படும் சில பாடசாலைகளில் அதிபர்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றனர்.

இந்த குறிப்பிட்ட பாடசாலைகளில் அன்று ஆசிரியர்களாக சேவையாற்ற வந்தவர்களே இவர்கள். இவர்களின் நிர்வாகங்களின் கீழ் இப்பாடசாலைகள் பாரிய அபிவிருத்தி பெற்றுவிட்டதாக கருதமுடியாது. மாறாக பாடசாலைகளில் ஒரு மந்தகதியும், தேக்க நிலையுமே தோன்றியிருக்கின்றன.

சகலஅதிபர்களையும் ஒட்டுமொத்தமாக கூற முடியாவிட்டாலும் சில அதிபர்கள் பாடசாலைகளை தமது பரம்பரை சொத்தாக்க பாவிப்பதும் பாடசாலை காணிகளில் விவசாயம் செய்து பலனடைவதும், தமக்கு எதிரானவர்களை வெளியேற்ற நினைப்பதும் போன்றச் செயல்களில் ஈடுபடுவதால் பாடசாலையினதும், கல்வியினதும் வளர்ச்சி தடைப்படுகின்றன.

இவர்கள் நீண்டகாலமாக ஓரே பாடசாலையில் அதிபராக இருப்பதால் சமூகத்திலும் தமக்கான சில குழுக்களை அமைத்துக்கொண்டு சுயலாபத்தை ஈட்டி வருகின்றனர். சிலர் குறுகிய அரசியல் செய்கின்ற அதிபர்களாகவும் இருக்கின்றனர்.

பாடசாலைக்கு நன்கொடைகளாகவும் அரசாங்கத்தினூடாகவும் வந்துசேரும் சில பல பொருட்கள் பாடசாலயில் கணக்கு காட்டப்படாமல் சில அதிபர்களின் வீடுகளில் இருப்பதற்கான ஆதாரங்கள் அண்மையில் கிடைக்கப்பெற்றன.

இவ்வாறான அதிபர்களின் நிர்வாகத்தின் கீழ் சேவையாற்றுகின்ற ஆசிரியர்களும் இவர்களின் நிர்வாகத்தை அலட்சியப்படுத்துகின்றனர். பாடசாலைகளுக்கு காலையில் 9 மணிக்கு வருதலும் புகைவண்டியில் 11 மணிக்கு வந்துவிட்டு பாடசாலை கையெழுத்து புத்தகத்தில் 8 மணியிட்டு கையொப்பம் இடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் நினைத்த நேரத்தில் வீட்டு செல்கின்றனர். கல்வியதிகாரிகளின் கவனத்திற்கும் இது பல தடவைகள் கொண்டு வரப்பட்டுள்ளபோதும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஒரு பாடசாலயில் அதிபருக்கான வெற்றிடம் ஒன்று ஏற்படுமாயின் அது உடனடியாக நிரப்பப்படவேண்டும். அரசியல் மட்டங்களில் இருந்துதான் அதற்கு உத்தரவு வரவேண்டுமாயின், கோட்ட, வலய, மாகாண மட்ட கல்வி பணிப்பாளர்களினதும், மாகாணச் செயலாளரினதும் பதவி நிலை கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது புதிதாக தரம் மூன்றுக்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் இன்னும் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பதில் அதிபர்களாக கடமை புரியும் ஆசிரியர்களின் நிலைமையிலும் தெளிவின்மை காணப்படுகின்றது.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு இவ்வாறு பல வருடங்களாக ஒரே பாடசாலையில் அதிபர்களாக சேவையாற்றும் இவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

தலவாக்கலை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!