Home > Slider > முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றில் எப்படி செயற்படுகின்றனர்? ( ஓர் அலசல்)

முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றில் எப்படி செயற்படுகின்றனர்? ( ஓர் அலசல்)

2015 ஜுன் மாதம் 3 ஆம் திகதி உதயமான தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று 3 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக காலடிவைத்துள்ளது.

வடக்கு,கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், உரிமைக் குரல் எழுப்பும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கூட்டணியில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியன பங்காளிக் கட்சிகளாக சங்கமித்துள்ளன.

குறித்த கூட்டணியிலுள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை பார்ப்போம்.
தமிழ் முற்போக்கு கூட்டணியானது கடந்த பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களம்கண்டிருந்தது. நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட்ட பழனி திகாம்பரம், ராதாகிருஸ்ணன், மல்லியப்பு சந்தி திலகர் ஆகியோர் வெற்றிவாகைசூடினர்;

கண்டி மாவட்டத்தில் களமிறங்கிய வேலுகுமாரும் வெற்றிக்கனியை ருசித்தார். கண்டி மாவட்டத்தில் எட்டாக் கனியாக இருந்த தமிழ்ப் பிரதிநிதித்துவமும் கூட்டணி அமைக்கப்பட்டதாலேயே 19 வருடங்களுக்கு பிறகு வென்றெடுக்கப்பட்டது. இது ஒற்றுமைக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்திலிருந்து அரவிந்தக்குமார் எம்.பியும், கொழும்பு மாவட்டத்திலிருந்து மனோ கணேசனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர். எனினும், இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி நிறுத்திய வேட்பாளர்கள் வெற்றியின் விளிம்புவரை வந்திருந்தாலும் அவர்களால் நிர்ணயிக்கப்பட்டிருந்த விரும்பு வாக்குகளை பெறமுடியாமல்போனது. எனினும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள இளம் எம்.பிக்களான வேலுகுமார், திலகர் ஆகியோர் மலையக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் துணிந்து குரல்எழுப்பி வருகின்றனர். கிடைக்கும் சந்தர்ப்பங்களை உரிய வகையில் பயன்படுத்திவருகின்றனர்.இவர்கள் இருவரும் மலையக மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையகளை கொண்டுவந்துள்ளதுடன், முக்கிய விவாதங்களில் பங்கேற்று தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை சபையின் கவனத்துக்குகொண்டுவந்தனர். அரவிந்தகுமார் எம்.பியின் பங்களிப்பும் பாராட்டும் வகையில்தான் இருக்கின்றன.

மேற்குலக நாடாளுமன்றங்களில் அமுலில்இருப்பதுபோன்று, ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கையிலும் நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்றுக்கொள்ளும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தமுறையின்கீழ் தோட்டத்தொழிலாளர்களுக்கான ஏழு பேர்ச்சஸ் காணி உரிமை பற்றி பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்பி வேலுகுமார் எம்.பி. பதில்களை அண்மையில் பெற்றுக்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் மேற்படி கேள்வி-பதில் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மலையக மக்களின் பிரச்சினை பற்றி முதன்முறை எழுப்பட்ட கேள்விகளாக அவை அமைந்தன.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள தலைவர்கள், நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்பதும், உரையாற்றுவதும் திருப்திகொள்ளும்வகையில் அமையவில்லை என்பதையும் கூறியாகவேண்டும். குறிப்பாக சபையின் நடைபெற்ற முக்கிய விவாதங்களை தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் கோட்டைவிட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் ஆலோசனைக்குழுக்களிலும், கண்காணிப்புக்குழுக்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் அங்கம் வகிக்கின்றன. சபை நடவடிக்கைகளுக்கு புறம்பாக இவ்வாறான கூட்டங்களிலும் பங்கேற்று உரிய சேவைகளை அவர்கள் ஆற்றிவருகின்றனர்.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பி. வேலுகுமார் கோப்குழு உறுப்பினராக பதவி வகித்தார். எனினும், சுஜீவ சேனசிங்களை உள்வாங்குவதற்காக வேலுகுமார் எம்.பியின் பதவியை துறக்கசொல்லுமாறு ஐக்கிய தேசியக்கட்சி விடுத்த அழுத்தத்துக்கு முற்போக்கு கூட்டணி அடிபணிந்தமை அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஏற்பட்ட முதல்தோல்வியாக பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைசின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தேசியப் பட்டியலை ஐக்கிய தேசியக்கட்சி வழங்கியது. எனினும், ஆறு எம்.பிக்களை வைத்துள்ள முற்போக்கு கூட்டணிக்கு ஒருதேசியப்பட்டியல்கூட கிடைக்கவில்லை. இதுவும் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.

எனினும், தேசியப்பட்டியலுக்கு பதிலாகவே பதுளை மாவட்டத்தில் வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வழங்கியதாக முற்போக்கு கூட்டணியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கூட்டணியிலுள்ள தலைவர்களுள் எவரேனும் ஒருவர் தோல்வியடைந்திருந்தால் அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்க பச்சைக்கொடி காட்டப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். எதுஎப்படியோ தேசியப்பட்டியலை கோட்டைவிட்டது ஒருகுறையாகவே பார்க்கப்படுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி அல்ல. எனவே, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒதுக்கப்படும் மொத்த நேரத்தில்தான் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் வாய்ப்பளிக்கப்படும்.
அத்துடன், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளும் கிடைப்பதில்லை. இதனால், நாடாளுமன்ற நிலையியற்கட்டளையின் 23-10இன் கீழ் கேள்விகளை எழுப்ப முடியாது.

இதனால்தான் நாடாளுமன்றத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கின்றது என்ற முடிவுக்கு இதன்மூலம் வந்துவிடமுடியாது. ஒழுங்குப் பத்திரத்தில் கேள்விகளை உள்ளடக்கி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வினாக்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இதில் ஆர்வம்காட்டுவதாக தெரியவில்லை.

சபைக்கு வருகைதந்து விவாதங்களை முழுநேரமும் அவதானிக்கும் பட்சத்தில், முக்கிய சந்தர்ப்பங்களின்போது ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி பதில்களைபெறவும் வாய்ப்பு இருக்கின்றது. எதுஎப்படியோ, கடந்தகாலங்களைவிட தற்போது மலையக மக்கள் பற்றி சபையில் ஓரளவாவது பேசப்படுவது மகிழ்வுக்குரிய வியடமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்பது, கேள்விகளை எழுப்புவது, சபை அமர்வுகளில் பங்கேற்பது உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எம்.பிக்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 225 பேர் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத்தில் கூட்டணி உறுப்பினர்கள் அறுவரும் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

எம்.திலகராஜ்-37

தொழிலாள் தேசிய முன்னணியின் சார்பில் முதல் இடத்தில் இருக்கின்றார்.
அரவிந்தகுமார்-70
மலையக மக்கள் முன்னணியின் சார்பில் முதல் இடம்.
வேலுகுமார்-98
ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் முதல் இடம்.
வி.இராதாகிருஸ்ணன் 123
மலையக மக்கள் முன்னணியின் சார்பில் இரண்டாவது இடம்.
மனோகணேசன்-171
ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் இரண்டாவது இடம்.
பழனிதிகாம்பரம்-176
தொழிலாளர் தேசிய முன்னணியின் சார்பில் இரண்டாவது இடம்.

ஆர்.சனத்

Leave a Reply

error: Content is protected !!