Home > Slider > அட்டனில் இருந்து ஒரு தந்தையின் “கதறல்; கருடனுக்கு வந்த மடல் பாடசாலை பதில் சொல்லுமா?

அட்டனில் இருந்து ஒரு தந்தையின் “கதறல்; கருடனுக்கு வந்த மடல் பாடசாலை பதில் சொல்லுமா?

அகில இலங்கை தமிழ் தினப் போட்டி – 2017
பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மத்திய மாகாணம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பானது

மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக அட்டன் புனித கேப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 07டீ ல் கல்வி பயிலும் எனது மகள் ஹஸ்பரா ஹானிம் 2017 ஆம் வருடத்திற்கான தமிழ் தினப் போட்டியில் இரண்டாம் பிரிவு வாசிப்புப் போட்டியில் மத்திய மாகாணத்தில் முதலாமிடத்தைப் பெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டார்.

மேற்படி அகில இலங்கை ரீதியான போட்டியானது கடந்த 09.07.2017 ஆம் திகதி நடாத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான எவ்வித முன்னறிவித்தலும் பாடசாலையினால் எமக்கு வழங்கப்படாமையினால் மேற்படி போட்டி நிகழ்வுகளில் எனது மகளுக்கு பங்குபெற முடியாமல் போனதென்பதனை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுபற்றி நான் கடந்த 12.07.2017 ஆம் திகதி பாடசாலை அதிபரிடம் விசாரித்தேன். அதற்கு அவர் பாடசாலைக்கு இது தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை எனவும், அவ்வாறான தமிழ் மொழிமூல கடிதங்கள் வந்திருப்பின் நான் தமிழ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி அதிபர் திருமதி. எல். தனபாலன் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன் எனவும் கூறினார்.

அதன் பிறகு நாம் விசாரித்த வகையில் கடந்த 12.06.2017 ஆம் திகதி அனைத்து கடிதங்களும் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெறுவதற்கு மத்திய மாகாணத்திலிருந்து 14 பாடசாலைகளில் 13 பாடசாலைகள் தோற்றியுள்ளதுடன், அட்டன் புனித கேப்ரியல் மகளிர் கல்லூரிக்கு மாத்திரம் கடிதம் கிடைக்கவில்லை என்று பொறுப்பற்ற பதில் கிடைக்கப்பெறுகிறது.

இது இவ்வாறிருக்க க.பொ.த. (சா.த) மற்றும் (உ.த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவிகளின் உட்பிரவேச அட்டைகள் பாடசாலைக்கு தபால் மூலம் கிடைக்காவிட்டால் பொடுபோக்காக விட்டுவிடுவார்களா? பரீட்சைகளை நடாத்தாமல் இருப்பார்களா? அல்லது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் அழைத்தாவது உட்பிரவேச அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களா? என்பதுவே எமது ஆதங்கமாகும்.

புனித கேப்ரியல் மகளிர் கல்லூரிக்கு மாத்திரம் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும்கூட அதிபர், உபஅதிபர் மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் ஏனைய பாடசாலைகளுடனும், தமது மேல்மட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டாமா? பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மத்திய மாகாணமே புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களாகிய நாம் மிகவும் சிரமப்பட்டு உழைத்து கடன் பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்க எவ்வளவு கஸ்டங்களையும், தியாகங்களையும் மேற்கொள்கின்றோம். அதேபோன்று எனது பிள்ளையும் இது தொடர்பாக மிகவும் மனவுழைச்சலுக்கு ஆளாகியிருப்பது மாத்திரமன்றி, எந்நேரமும் அழுகையுடன் தனது மேலதிக கல்வி நடவடிக்கைகளை தொடர மிகவும் தயக்கத்துடன் இருக்கிறார்.

ஒரு பாடசாலையானது மாணவ, மாணவிகளின் திறமையை இனங்கண்டு, அதனை ஊக்குவிப்பதுடன், வெற்றியின் பக்கம் கொண்டு செல்லும் உந்துதல் சக்தியை வழங்க வேண்டும். இது அவர்களின் தலையாயப் பணியாகும். வெறுமனே வெற்றி கிடைத்தவுடன் அதன் கிரீடத்தை தலைமேல் வைத்துக்கொள்வது ஒரு சிறந்த நிர்வாகத்தின் பண்பாகாது. அத்துடன் பாடசாலை நிர்வாகமானது எனது பிள்ளையின் அபிவிருத்திக்கும் அதன் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதையே நான் இதனூடாகக் காண்கிறேன்.

கௌரவ ஆசிரியர் அவர்களே! எனவே தயவு செய்து இந்த செய்தியை அனைத்து இணையத்தளங்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நான் இவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கான காரணம் எனது பிள்ளை மாத்திரமன்றி இனிவரும் காலங்களில் மற்றைய பிள்ளைகளுக்கும் இதுபோன்ற அநீதி ஏற்படாதிருக்க அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும், பாடசாலை ஆசிரியர்களும், நிர்வாகமும் தத்தமது பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும்.

குறிப்பு: எந்த திருத்தங்களும் இன்றி அப்படியே  பிரசுரமாகுகிறது.

இங்ஙனம்,
உண்மையுள்ள

யு.ர். ரிஸ்வான்
(தந்தை)

தொடர்புகளுக்கு – 071-5615082 – 0718 22 99 47

Leave a Reply

error: Content is protected !!