Home > Slider > தோட்டப்புறங்களில் ஆசிரியர்களிடையே நேரமுகாமைத்துமின்மையால் சீரழியும் கல்வி!

தோட்டப்புறங்களில் ஆசிரியர்களிடையே நேரமுகாமைத்துமின்மையால் சீரழியும் கல்வி!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அந்தவகையில் கல்வி கண் திறக்கும் ஆசிரியர்கள்மீது கருடன் அளவுகடந்த மதிப்புவைத்துள்ளது. எனினும், மாணவச் சமூகத்தின் நலன் கருதியும், மலையகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் சில ஆசிரியர்களின் அட்டகாசச்செயற்பாடுகளை கருடன் அம்பலப்படுத்திவருகின்றது.

அவர்கள் திருந்தவேண்டும்: தம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மாறாக ஆசான்களை அவமதிப்பது எமது பதிவுகளின் நோக்கமல்ல. ஆசிரியர்கள் என்பதால் அவர்கள் எதுசெய்தாலும் கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது. இதன்படி இன்றைய தினமும் உரிய ஆதாரங்களுடன் கருடனுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மலையகத்தில் தோட்டப்புற பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுள் சிலர், நேர முகாமைத்துவத்தின்படி செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாக நேரத்தின்பிரகாரம் காலை 7.30 இற்குள் பாடசாலைச்சென்று வரவு பதிவு இடவேண்டும். அந்தநேரம் தாண்டியதும் அதன்கீழ் அதிபர் சிவப்பு கோடொன்றை இடவேண்டும். தாமமித்து வருபவர்கள் அதன்கீழ்தான் கையொப்பமிடவேண்டுமென்பதுடன், காரணத்தையும் விளக்கவேண்டும். தொடர்ச்சியாக பிந்திவருவார்களாயின் அவர்களுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுப்பார். இதுவே நடைமுறை.

எனினும், சில ஆசிரியர்கள் 10 மணி கடந்தே பாடசாலை வருகின்றனர் என்றும், இதை அதிபர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ( தொடர்ச்சியாக தவறுகள் இழைக்கப்படுமாயின் பாடசாலைகளின் பெயர், விவரத்தை வெளியிட கருடன் தயங்கமாட்டான் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்)

அதுமட்டுமல்ல, பாடநேரத்தில் முகநூல் பார்த்தல், அரட்டை அடித்தல், ஏனைய வேலைகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளிலும் தலைவிரித்தாடுவதால் தோட்டப்பகுதிகளில் கல்வி நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் குறிப்பிடவில்லை, எனினும், ஒருசிலரின் செயற்பாட்டால் அனைவர்மீதுமே தவறான விம்பம் விழுகின்றது.

அதேவேளை, பிந்திவருபவர்கள் பாடசாலை முடிவதற்குள் சென்றுவிடுகின்றனர். மேலும் சிலர் பிரத்தியேக வகுப்புகளையும் பாடசாலைகளிலேயே நடத்தும் நிலையும் காணப்படுகின்றது. மாணவர்களின் நலன் கருதி இலவச வகுப்புகளை மேலதிகமாக பாடசாலைகளின், சமூக நலன் கருதி நடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பண வசூலிப்புக்காகவே நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றுவருகின்றன.



Leave a Reply

error: Content is protected !!