முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பதால் எமது ஒற்றுமை கேள்விக்குறியாகும்! அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பதால் எமது ஒற்றுமை கேள்விக்குறியாகும்! அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எடுக்கப்பட்ட முடிவானது அவர்கள் நீண்ட ஒரு கலந்துரையாடல் மற்றும் இரண்டு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் உட்பட கடந்த காலங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் காரணமாக வடகிழக்கில் இருக்கின்ற ஏனைய கட்சிகள் அவர்கள் மீது சேறு பூசுவது அல்லது அவர்களுடைய தீர்மானத்தை விமர்சிப்பது என்பது தவறான ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் ஒரு சில கட்சிகள் அவர்களை விமர்சிப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு (11.11.2019) அன்று இரவு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கின்ற பொழுது ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் மிகவும் சிந்தித்து ஆராய்ந்து கலந்துரையாடலின் பின்பே தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தலைவர்கள் அவர்களுடைய அரசியல் அனுபவம் கடந்த கால அனுபவங்களை கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றார்கள். எனவே அவர்களை வெறுமனே அரசியலுக்காக விமர்சனம் செய்வதோ அல்லது சேறு பூசுவதோ தவறான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் வடகிழக்கில் இருக்கின்ற பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டு பெற்றுக் கொண்டது என்ன? இதன் மூலம் நாம் பாரிய இழப்புகளையே சந்தித்திருக்கின்றோம். அங்குள்ளவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எவ்வளவோ விடயங்களை சாதித்திருக்க முடியும். ஆனால் நாம் ஒற்றுமையை இழந்ததன் காரணமாக பல இழப்புகளையும் பொருளாதார கலை, கலாச்சார ரீதியாகவும் நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக பல்வேறு விடயங்களை சாதித்திருக்கின்றது. குறிப்பாக வடகிழக்கு மக்களுடைய காணி பிரச்சினை கல்வி சுகாதார பிரச்சினை என ஒரு சில விடயங்களுக்கு தீர்வு படிப்படையாக கிடைத்துள்ளது. 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்த பிரச்சினைகளை ஒரே இரவில் அல்லது ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. இதுதான் நடைமுறை இவற்றை படிப்படியாக புரிந்துணர்வு அடிப்படையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலமாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தீர்வை வழங்குகின்ற பொழுது தெற்கு மக்களும் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுடைய எண்ணங்களிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நிரந்தரமான ஒரு வெற்றியான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

அதைவிடுத்து அவசர அவசரமாக எடுக்கப்படுகின்ற தீர்மானம் நிலையானதாக இருக்காது. அதிலும் எந்த தலைவர் வெற்றி பெற்றால் அதனை பேச்சுவார்த்தை மூலமாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

வெறுமனே தங்களுடைய அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பது பொருத்த மான ஒரு விடயம் அல்ல. அதிலும் இது ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கலாம்.எனவே இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரே வெற்றி பெறப்போகின்றார் அதில் சிறந்தவர் யார் என்பதையே நாம் தீர்மானிக்க வேண்டும்.இதனையே மலையக மக்கள் இன்று செய்கின்றார்கள்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தை விமர்சிப்பது என்பது எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நாம் பெரும்பான்மை மக்களுக்கு கூறுகின்ற ஒரு செய்தியாக மாறிவிடும் இது எதிர்காலத்தில் எங்களுடைய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பாதகமாக அமையலாம்.

அந்த வகையில் வடகிழக்கில் இருக்கின்ற ஏனைய கட்சிகள் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனெனில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேறு எந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெறப் போவதில்லை.எனவே வெற்றி பெறுகின்ற ஒருவரை நாம் ஆதரித்து எங்களுடைய அபிவிருத்தியையும் உரிமைகளையும் ஜனநாயக ரீதியில் பிரிக்கப்படாத இலங்கைக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் இதுவே புத்திசாலித்தனமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!