
மலையகத்தின் எதிர்காலம்” ஒரு ஊடகவியலாளரின் பார்வை!
கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் வெளிநாட்டு வருமானத்திற்கு முதுகெலும்பாக செயற்பட்ட தோட்ட தொழிலாளிகள் மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி சுமக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகி இருக்கின்றனர்.
இன்று உலகமே பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து இருக்கும் இவ்வேளையில் இலங்கை முதல்தடவையாக ஆன்லைன் மூலமாக அதாவது டிஜிட்டல் டெக்னாலஜி மூலமாக தேயிலை விற்பனை ஏலத்தை நடத்தி வெற்றி கண்டுள்ளது.
இது தோட்டத்தொழிலாளர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாக கருத வேண்டும். இவர்களை தோட்டங்களின் வேலை செய்யுமாறு பெருந்தோட்ட துறை அமைச்சர் அறிவித்து இருப்பதை சாதகமாக பார்க்க வேண்டும்.
ஏனெனில் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்ததந்த தோட்டங்களின் தங்கி இருப்பதால் அவர்களால் இந்த வேலையில் ஈடுப்பட முடியும்.
இதனால் அவர்களுக்கு வருமானம் ஒரளவு கிடைக்கும்.
இது வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் போன்று தோட்டத்தில் இருந்து கொண்டே வேலை செய்யும் திட்டம்.
1980 ஆம் ஆண்டு வரை தேயிலை , இறப்பர், தென்னை செய்கை மூலமாக தான் நமது நாட்டின் அந்நிய செலவானி வந்தது. அதன்பிறகே ஆடை தொழிற்பேட்டை, சிறிய உற்பத்திகள் உருவாக்கப்பட்டன.
அதன்பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அரசாங்கமும் முதலாளிமார்களும் சரியாக மதிப்பிடவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையை தொழிற்சங்கங்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சமூர்த்தி நிவாரணம் வழங்குகின்றது. அந்த திட்டத்தில் எமது தோட்ட தொழிலாளர்களையும் உள்ளடக்கினால் அவர்களுக்கு தற்போதைய நிலையில் சிறிய ஊக்குவிப்பு தொகையாக அது இருக்கும்.
அது மாத்திரமல்ல இந்த சந்தர்ப்பத்தை நமது தொழிற்சங்கங்களும் சுயநலமின்றி சிந்திக்க வேண்டும். மலையக புத்தி ஜீவிகளை அழைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்க முடியாத வகையில் பாதுகாப்பு கவஸங்களை வழங்க வேண்டும். தோட்டங்கள் சுத்தமாக்க பட வேண்டும்.
மாணிய முறையில் அத்தியாவசிய பொருட்களை அரசாங்கம் வழங்க வேண்டும். இதுவரை பல தோட்டங்களுக்கு எந்த நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை.
அதோடு உறுதியளித்த சம்பள உயர்வையும் கொடுக்கவில்லை. ஆனால் தொழிலாளர்களின் உழைப்பை மட்டுமே அரசாங்கம் எதிர்பார்ப்பதை ஏற்று கொள்ள முடியாது
ஏனெனில் காலம் காலமாக தோட்ட தொழிலாளர்கள் நாட்டிற்கு உழைத்து கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த நன்மைகளை
சிறிய எண்ணிக்கையாக கூறி விடலாம்.
எனவே தோட்டத்தொழிலாளிகளின் உழைப்பை முழு நாடும் அறிய வேண்டும். ஏனைய சமுகங்களும் இதனை உணர்ந்து தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.
இளைஞர்கள் தம்மால் முடிந்தளவு சமூக விழிப்புணர்வு பதிவுகளை பதிவு செய்து மீண்டும் தோட்டத்தொழிலாளர்களை நம்பி இலங்கை தேசம் என்ற சுலோகத்தை கொண்டு செல்ல வேண்டும்.
இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. “தோட்டத்தொழிலாளர்கள் இல்லையேல் நாடில்லை “.
டன்சினன் மணி ( ஊடகவியலாளர்)
1,785 total views, 2 views today