
பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து பரிசீலனைசெய்ய வேண்டும் : திகாம்பரம் எம்.பி வேண்டுகோள்!
கொரோனா தொற்றிலிருந்தது மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது உசிதமானது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது ;
குறிப்பாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு திட்டங்களும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு திட்டங்களும் உரிய முறையில் அமல்படுத்தப்படவில்லை.
மேலும் பாடசாலை மாணவர்கள் பொது போக்குவரத்து சேவையின் ஊடாக பாடசாலைக்குச் செல்லுகின்ற போது கொரோனா தொற்றாளர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதில் அச்ச நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
1,119 total views, 8 views today