
தொழிலாளியின் அடிப்படை சம்பளம் ஆயிரம் என்பதை அரசு சட்டமாக்க வேண்டும்; சோ. ஸ்ரீதரன் கோரிக்கை!
நாட் கூலி தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம்
ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தினால்
வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தப்
படுத்துகின்ற போதே தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பது சாத்தியமாகும்.’ என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி
உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் கருத்து தெரிவித்தப் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹற்றன் பணிமனையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் ப. கல்யாணகுமார், இளைஞரணி தலைவர் பா. சிவனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் :
இலங்கையில் தற்போது நாட் கூலித் தொழிலாளி ஒருவரின் அடிப்படை சம்பளம் 400 ரூபாயாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கம் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வேதனம் தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சராகிய பிரதம மந்திரியால் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வானது
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும்
இடையில் இடம் பெறுவதொன்றாகும்.
இந்தப் பேச்சு வார்த்தை இடம் பெறுவதற்கு முன்பு
நாட்கூலி தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளம் 1000 ரூபாய் என்று அரசாங்கம் உரிய முறையில் அறிவிக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும்.
இந்த விடயம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
ஜனவரி முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கப் போவதாக தற்போது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை நாள் சம்பளமாக 700 ரூபாவைப் பெற்று வருகின்றனர்.
எந்த விதமான நிபந்தனை கொடுப்பனவுகளும் இன்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 ரூபாய் கிடைக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடத்து தோட்டத் தொழிலாளர்களை
ஏமாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
இவ்விடயம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டி உறுப்பினர்கள் தமது சக தொழிலாளர்களிடத்தில் இவ்விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
814 total views, 2 views today