
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன்!
காலங் காலமாக ஏமாற்றத்தை சந்தித்து வரும் மலையக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் இனிமையும் பொங்க வேண்டும் என மனம் குளிர்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் விடுத்துள்ள தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
சம்பள உயர்வு இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ள பெருந்தோட்ட மக்களுக்கு பிறந்துள்ள தை மாதத்திலாவது வழி பிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தனி வீட்டுத் திட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டு அவர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு கல்வியே கருந்தனம் என்பதை உணர்ந்து பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சொந்த முயற்சியில் தம்மை வளர்த்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் ஒவ்வொருவரும் பிறந்துள்ள புதிய ஆண்டில் திடசங்கற்பம் பூண வேண்டும்.
கொரோனா காலத்தில் இழந்த பொருளாதாரம் சீரடைந்து நாடும் வீடும் நலம்பெற வேண்டும். பழையன கழிந்து புதியன புகுவது போல, கொரோனா அச்சுறுத்தல் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும். உணவை உண்டாக்கித் தருகின்ற உழவர்களுக்கும் கால்நடைகளுக்கும் உலகுக்கு ஒளி தருகின்ற சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கின்ற நன்னாளில் உழைக்கும் மக்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் வாழ்வு செழிக்க அனைத்து நலன்களும் பெருக வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
172 total views, 6 views today