
நல்லாட்சி அரசாங்கத்தில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு குடும்பத்திற்கும் இரண்டரை வருடமாக ஒரு வீடு கூட கட்டிக்கொடுக்கவில்லை.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் பல அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எந்த தோட்டத்திலும் வீடுகளை இழந்து தவிக்கின்ற மக்களுக்கு எந்த ஒரு வீடும் பெற்றுக்கொடுக்கவில்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்.பி.சத்திவேல் தெரிவித்தார்.
நேற்று (22) தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் தீயனர்த்தம் காரணமாக வீடுகள் இழந்துள்ள மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இன்று தீபத்து காரணமாக பல தோட்டங்களில் எமது மக்கள் வீடுகளை இழந்துள்ளனர், அவர்களுக்கு உடனடியாக இழந்த வீடுகளை கட்டிக்கொள்வதற்கான பொருளாதார வசதிகள் கிடையாது. அவ்வாறு வீடுகளையும் உடைமைகளையும் இழந்தவர்களின் வலி எவ்வளவு என்று நாம் அறிவோம. அதற்காக அந்த நேரத்தில் பலர் வந்து உதவி செய்திருப்பார்கள். ஆனால் அது நிரந்தர தீர்வாகாது. நிரந்தர தீர்வு என்று சொன்னால் அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பது தான் எனவே தான் இந்த அரசாங்கம் வந்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க ஆரம்பித்துள்ளோம்.
இன்று சந்திரகாமம், பெல்மோரா, மெராயா உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளை இழந்துள்ள மக்களுக்காக வீடுகளை கட்டுவதற்கு ஆரம்பித்துள்ளனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டித்தர முடியாது என்று தான் அரசாங்கம் சொன்னது. காரணம் அது மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டவை ஆகவே கட்டித்தர முடியாது இயற்கை அனர்த்தம் என்றால் கட்டித்தர முடியும். என்றது எனினும் எமது ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் அவர்களும் எமது மக்ளின் நிலைமையினை எடுத்து கூறியதன் காரணமாகத்தான் இன்று இவர்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன.
ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்த சமூகத்திற்கு என்ன தேவை என்று நன்கு அறிந்து தான் செயப்பட்டு கொண்டிருக்கிறது அதற்கு சிறந்த உதாரணம் சம்பள பிரச்சினை அன்று சொன்னார்கள் கூட்டு ஒப்பந்தம் சாவுமணி, அடிமை சாசனம் என்றெல்லாம் சொன்னார்கள் நாங்கள் 1998 இருந்து சொல்லி வந்தோம் கூட்டு ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று. ஆனால் அதனை யாரும் கேட்கவில்லை. இப்போது சொல்கிறார்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியே வர வேண்டாம் என்று ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு அனுபவமிக்க அமைப்பு அதில் உள்ளவர்களும் அப்படி தான் எமது மக்களின் பாதுகாப்பு பற்றி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருக்கின்றது.
உங்களுக்கு தெரியும் நாங்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு மத்திய மாகாண கல்வி அமைச்சினை பெற்றுக்கொண்டோம். அப்போது எமது தலைவர்களில் பலர் அதனை வழங்க விடாது சதி செய்தனர் ஆனால் எமது பலத்தினால் நாங்கள் அதனை பெற்று மூன்று வருட காலப்பகுதியில் பல்வேறு சேவைகள் செய்து கொடுத்துள்ளோம். பல பாடசாலைகளுக்கு கட்டடங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வீதிகள், வாசிகசாலைகள் வேலை வாய்ப்பு என பல்வேறு அபிவிருத்திகளை செய்து கொடுத்துள்ளோம். ஆகவே எமது சமூகத்திற்கு என்னென்ன தேவை அதனை எதிர்காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்து கொடுக்கும் ஏனைய சமூகத்திற்கு இணையாக வாழ வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஒரே நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்
214 total views, 8 views today