விருந்தோம்பலுக்கு உதாரணமான கொக்கு..! நட்பை உணர்த்தும் கதை…

0
114

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’

என்னும் குறளில் பிறப்பால் அனைத்து உயிர்களும் சமமானவையே என்பதை வள்ளுவர் நமக்குத் தெளிவாக விளக்குகிறார். மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்களின் குணங்களே அவர்கள் நல்லவரா? தீயவரா என்பதைத் தீர்மானிக்கின்றன.

மகாபாரதம், சாந்தி பருவத்தில் ஓர் அழகிய கதை இருக்கிறது. அந்தக்கதையை விரிவாகப் பார்ப்போம்.கொக்கு

கௌதமன்! உயர்ந்த குலத்தில் பிறந்தவன். அவனது தந்தையோ சகல கலைகளையும் அறிந்த பண்டிதர். ஆனால். அவரது பிள்ளையான, இவனோ தீய குணங்களால் நிறைந்தவன் . கடுகளவும் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதவன். அவனுடைய காலத்தில் தேவர்களாலேயே போற்றிப் புகழப்படும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு ஒன்றும் வாழ்ந்து வந்தது. தான் பிறந்த பறவைகளின் குலத்தையே அனைவரும் பெருமையாக பார்க்கும்படி வாழ்ந்த அந்த கொக்கின் பெயர் ராஜசிம்மன்.

இந்த கொக்குக்கு விருபாட்சன் என்னும் அரக்கன் ஒருவன் நண்பனாக இருந்தான். அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவனாக விளங்கினான்.

கௌதமனோ மிகப்பெரிய சோம்பேறி, பிறரது உழைப்பிலேயே காலத்தைக் கழித்து விடவேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தான். அவனுடைய தந்தையான பண்டிதர் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்தான்.

‘பெற்ற பிள்ளை வெட்டியாக இப்படி சுற்றித் திரிகிறானே’ என்ற துயரம் தாங்காமலேயே பண்டிதர் ஒரு நாள் மண்ணை விட்டு மறைந்தார். தந்தை மறைந்ததால், பண்டிதரின் உழைப்பிலேயே காலம் தள்ளிய கௌதமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு இடையில் அவனுக்கு திருமணம் வேறு ஆகியிருந்தது.

‘வேட்டையாடிப் பிழைக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்து அப்படியே தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு நாள் பண்டிதரின் நண்பர் ஒருவர் கௌதமன் வேட்டையாடித் திரிவதைக் கண்டார். அவர் கௌதமனிடம் ‘உன் தந்தை எப்பேர்பட்டவர். அவருடய மகனாக இருந்துகொண்டு பிற உயிர்களைக் கொல்லலாமா, ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்! தயவுசெய்து வேட்டையாடுவதை விட்டுவிடு” என்றார்.

அவர் தந்தை செய்த புண்ணியத்தால்தானோ என்னவோ இந்த அறிவுரையைக் கேட்டுக் கொண்டான். வியாபாரம் செய்ய முதலில் வியாபாரிகளோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ளவும் முடிவு செய்தான். அப்படியே ஒரு வியாபாரக் குழுவோடு இணைந்து, அவர்களுடன் காட்டு வழியே சென்றுகொண்டிருந்தான். அப்போது காட்டில் மதம் பிடித்த யானைக்கூட்டம் ஒன்று சுற்றித் திரிந்தது. இவர்களைக் கண்டதும் தாக்க ஆரம்பித்தது. எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு திசையில் ஓடினர். கௌதமன் மட்டும் ஒரு மரத்தின் மேல் அமர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டான்.

யானைகள் சென்ற பிறகு, மரத்தில் இருந்து இறங்கி அருகில் நந்தவனம் போல் இருந்த பகுதிக்கு வந்தான். பசியோடு இருந்ததால் அங்கு இருந்த மரங்களில் கனிகளைப் பறித்து உண்டான். அப்படியே அருகில் இருந்த ஆலமரத்தில் படுத்து உறங்க ஆரம்பித்தான். தூங்கிக்கொண்டிருக்கும் போது அவன் மீது சில்லென்று தென்றல் போன்ற காற்று வீசுவதை உணர்ந்தான். கண் விழித்துப் பார்க்கவே, கொக்கு ஒன்று அவனுக்கு தனது சிறகுகளால் விசிறிக் கொண்டிருந்தது.

அந்த கொக்கிடம் ‘யார் நீ’ என்று விசாரித்தான். உடனே கொக்கு, ‘ என் பெயர் ராஜசிம்மா. இந்த மரம் என் வீடு. நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி. நீங்கள் தூங்கும் போது உங்கள் நெற்றியில் வியர்வை பூத்துக் கொண்டிருந்தது. அதனால்தான் விசிறிக் கொண்டிருக்கிறேன்’ என்றது. மேலும், ‘நீங்கள் என்ன நோக்கத்துக்காக காட்டிற்குள் வந்தீர்கள்” என்றும் அன்போடு கேட்டது. கௌதமனும் தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் ராஜசிம்மனிடம் கூறினான்.

கௌதமனின் வறுமை நிலையைப் புரிந்துகொண்டது ராஜசிம்மன். அவனுக்கு உதவ நினைத்தது. கௌதமனிடம், ‘என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் விரூபாட்சன். நாளை அவனிடம் செல்லுங்கள். என் நண்பன் என்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் அவன் செய்து தருவான்’ என்றது ராஜசிம்மன். அதேபோல் அடுத்த நாள் விரூபாட்சனை சந்தித்தான் கௌதமன். ராஜசிம்மனின் நண்பன் என்றதுமே, மிகுந்த அன்போடு உபசரித்து வேண்டிய செல்வத்தை அள்ளிக் கொடுத்து அனுப்பினான் விரூபாட்சன்.

கௌதமனும் அங்கிருந்து கிளம்பி ராஜசிம்மனைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்தான். இரவு நெடுநேரமாகிவிட்டதால், அங்கேயே தங்கவும் முடிவு செய்தான். கொக்கும் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தது. மேலும் கௌதமனை விலங்குகள் எதுவும் தாக்காமல் இருக்க, சற்றுத் தூரத்தில் நெருப்பு மூட்டியது. தானும் அங்கேயே படுத்து உறங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்தான் கௌதமன். அருகே இருந்த பெரிய கொக்கைப் பார்த்தான். தொலைவில் எரியும் நெருப்பையும் பார்த்தான். அவனுக்கு ஆசை தலைக்கேறியது. அப்படியே எழுந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த கொக்கைத் தூக்கி நெருப்பில் போட்டான். அதன் மாமிசத்தை எடுத்து, சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டான். காலை விடிந்ததுமே அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

இதையெல்லாம் தேவலோகத்தில் இருந்து, தேவேந்திரன் பார்த்துக் கொண்டிருந்தார். கௌதமனின் செயலைக் கண்டு ஆச்சரியத்தில் திகைத்தார்.

மறுபுறம் தினமும் தன்னைச் சந்திக்க வரும் ராஜசிம்மன் இன்று ஏன் வரவில்லை என்று விரூபாட்சன் யோசித்துக் கொண்டிருந்தான். நேற்று வந்த கௌதமன், எதாவது செய்திருப்பானோ என்கிற சந்தேகமும் அவனுக்கு வந்தது. எனவே தன் படைவீரர்களை அனுப்பி தன் நண்பன் கொக்கின் நிலையை அறிந்து வரச் சொன்னான். நண்பனின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விரூபாட்சனனுக்கு தன் நண்பனின் இறக்கைகளை மட்டும் வீரர்கள் கொண்டு வந்ததைக் கண்டதும் மிகுந்த துயரமடைந்தான். கோபத்துடன் கௌதமன் எங்கிருந்தாலும், அவனை இழுத்து வரச் சொன்னான்.

படைவீரர்களும் உடனடியாக கௌதமனை இழுத்து வந்தனர். அவனைக் கண்டதும், ‘உடனடியாக இவனைக் கொன்று, இவன் மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்’ என்று உத்தரவிட்டான். உடனே வீரர்களில் ஒருவன், ‘ இதோ இப்போதே இவனைக் கொல்கிறோம். ஆனால், நன்றி கெட்ட இவன் மாமிசத்தைச் சாப்பிடும் அளவுக்கு நாங்கள் தரம் கெட்டவர்கள் அல்ல’ என்றான் . காட்டு விலங்குகளுக்கு கௌதமனின் உடல் வீசப்பட்டது, காட்டு விலங்குகளும் அவன் உடலை உண்ண மறுத்தன.

சோகத்துடன் தன் நண்பனான ராஜசிம்மனை எரிக்க முற்பட்டான், விரூபாட்சன். அப்போது வானுலகத்தில் இருந்து தேவேந்திரர் தோன்றி ‘இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறேன்’ என்று கூறி உயிர்ப்பித்துத் தந்தார். விரூபாட்சன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

‘நட்பில், விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் இந்தக் கொக்குக்கு வரம் ஓன்றும் தர விரும்புகிறேன்’ என்றார் தேவேந்திரர். ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கொக்கிடம் கேட்டார். உடனே கொக்கு, ‘என் நண்பனான கௌதமன் மீண்டும் உயிர்ப்பிழைக்க தாங்கள் வரம் அருள வேண்டும்’ இது தான் நான் விரும்பும் வரம் என்றது.

கொக்கின் இந்தப் பண்பைக் கண்டு விண்ணுலகத்தில் இருந்து அத்தனைத் தேவர்களும் கொக்கின் மீது பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தனர். உயிர் பெற்று எழுந்த கௌதமன் கண்ணீர் மல்க கொக்கிடம் மன்னிப்புக் கேட்டான். கொக்கு அவன் கண்ணீரைத் துடைத்தது.

குலம் எதுவாக இருந்தாலும், குணத்தால் தான் உயர்ந்தோர் தாழ்ந்தோர் தீர்மானிக்கப்படுகின்றனர் என்பது இந்தக் கதை மூலம் தெளிவாகின்றது. அது மட்டும் அல்லாமல் நன்றியுணர்வு, விருந்தோம்பலின் பெருமைகளையும் நமக்கு அழாகாக எடுத்துச் சொல்கிறது.

vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here