முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > கட்டுரை > கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் முழுபார்வை!!

கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் முழுபார்வை!!

கந்த சஷ்டி விரத மகிமைகள்,

கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை,
கந்தசஷ்டி விரதத்தின் பலன்,
வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது
(20.10.17 முதல் 25.10.17 வரை )

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்.

கந்த சஷ்டி விரதம்கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி

அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே

இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்

மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே

வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே

சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே

திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந்தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.

இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.

சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்

கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா!

மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

கந்த விரத மகிமை

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை

ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் மனதூய்மையுடன் முருகப்பெருமனை வணங்கினால் நினைத்தது கைக்கூடும்.

 

ஷான் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!