தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2500/- தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது!: கணபதி கனகராஜ்

0
125

வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்த தனியார்துறை ஊழியர்களுக்கான மாதாந்தம் 2500/-ரூபா சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது.

அதே போல ஏப்ரல், மே மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நாலொன்றுக்கு 100ரூபா இடைக்கால நிவாரண கொடுப்பனவும் காணல் நீரான கதையாகிவிட்டது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வின் தற்போதய நிலைமை குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தோட்ட தலைவர்கள், மகளிர் காங்கிரஸ் தலைவிகள், மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் பொகவந்தலாவையில் மாவட்ட தலைவர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கணபதி கனகராஜ் கருத்து தெரிவித்தபோது,

தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. சகலவிதமான பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாழ்கை செலவு சுமையில் பங்கெடுக்கும் தோட்டத் தொழிலாளர்களை நிவாரண கொடுப்பணவுகளிலும், சம்பள அதிகரிப்பிலும் எவரும் கண்டுகொள்வதில்லை.

காலத்திற்கு காலம் மலையக அமைச்சர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் தோட்டத் தொழிலாளர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

வரவு செலவு திட்டத்தில் தனியார்துறை சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட 2500/- தொடர்பில் வெளியான வர்த்தகமானி அறிவித்தல் தோட்டத் தொழிலாளருக்கு பொருந்தாத வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் 400/- ரூபாவிற்கு குறைந்த நாட்கூலியை பெரும் தொழிலாளர்களும், கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பளத்தை நிர்ணயிக்காத நிறுவனங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் பரிந்துரைத்த 2500/- சம்பள உயர்வை வழங்கவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறானநிலையில் தோட்டக் கம்பனிகளுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றிவிட்டு எவ்வாறு அவர்களுக்கெதிராக போராட்டம் நடத்த முடியும்.

போராட்டம் நடத்துவதாக இருந்தால் அந்த போராட்டத்தை வர்த்தமானியை வெளியிட்டவர்களுக்கெதிராகவே ஆரம்பித்திருக்க வேண்டும்.

2500 ரூபாவை பெற்றுக்கொடுப்போம் எனவும், முதன்முதலில் அரசாங்கம் முன்மொழிந்த சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கப்போகிறது. என தம்பட்டம் அடித்தவர்கள் அது கைகூடாது என்ற நிலை வந்தவுடன் தற்போது இடைக்கால நிவாரணம் என்ற கூத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த இடைக்கால கொடுப்பனவு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம், புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டவுடன் இவ்வாறு வழங்கப்படுகின்ற தொகையை தொழிலாளர் சம்பளதிதிலிருந்து கழித்துக்கொள்வார்களாம்.

அரசாங்கத்திடமிருந்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடன் வழங்கப்பட்டால் மாத்திரமே இந்த இடைக்கால நிவாரன கொடுப்பனவை தோட்டக் கம்பனிகள் வழங்குமாம்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் நிவாரண கடனுக்காக கையேந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா?

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாட்களில் தெரியும் என தமிழில் ஒரு பிரபலமான முதுமொழி ஒன்று உண்டு.

கடந்த ஒன்றரை வருடத்தில் மலையக மக்கள் பல பொய்களையும், பித்தலாட்டங்களையும், மண்ணெண்ணை நாடகங்களையும் அறிந்தும், கண்கூடாக தெரிந்தும் கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பொருத்தமான நேரத்தில் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து காய்நகர்ததல்களை ஆரம்பித்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அனுபவமில்லாமல் தலையிட்டு இன்று மூக்குடைபட்டு நிற்பவர்கள் அன்று அமைதியாக இருந்திருந்தால் கடந்த ஒரு வருடகாலத்திற்கு முன்பே சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்திருக்கும்.

கடந்த பொது தேர்தலில் சில பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட கம்பனிகளுடன் மறைமுகமாக கூட்டுசேர்ந்து ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தை அரசியலாக்கி கெடுத்த வரலாற்று சம்பவமாக இது அமைந்துவிட்டது.

எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்வது குறித்த பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில சாதகமான நகர்வுகள் தென்பட்டன.

ஆனால் கடந்த ஒன்றரை வருட கால நிலுவை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது.

எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் நாடு திரும்பியவுடன் தோட்டக் கம்பனிகளுடனான பேச்சுவார்ததை தொடரவுள்ளதுடன், வெகு விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here