முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி!

தோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்திற்கு சொந்தமான டன்பார் பிரிவில் உள்ள ஐந்து ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டன்பார் தோட்டத்தொழிலாளர்கள் 04.08.2018 அன்று அட்டன் எபோஸ் பிரதான வீதியில் டன்பார் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு முன்னால் வீதியனை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாகவும் ஐம்பது நூறு வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக இந்த தோட்டத்தில் உள்ள லயன் அறைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு, ஐந்து பேர் வரை வாழ்வதாகவும், இதனால் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே இருப்பதாகவும் அவ்வாறு இருக்கும் போது தங்களுக்கு என்று ஒரு துளியளவு நிலம் கூட வழங்காது பரம்பரையாக உழைத்த தோட்டத்தில் உள்ள காணிகளை தோட்டத்திற்கு எவ்விதத்திலும் சம்மதம் இல்லாத ஒருவர் தோட்ட காணியினை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடுவதாகவும் இதனால் இவர்களின் வாழ்தாரம் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த காணியில் வேலை செய்யுமாறு தோட்ட நிர்வாகம் பணித்து வருகிறது. தோட்ட தொழிலாளர்கள் இந்த தேயிலை காணிக்கு வேலைக்கு சென்றால் குறித்த நபர் தனது செல்வாக்கினை பயன்படுத்தி பொலிஸாரினை வரவழைத்து கைது செய்வதாக அச்சுறுத்தி வருவதாகவும், தொழிலாளர்கள் தங்களது தேவைகளுக்கு நகரங்களுக்கு செல்லும் போது பல்வேறு நபர்களை கொண்டு தொழிலாளர்களை மிரட்டி வருவதாகவும் இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

இந்த காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி முதல் நுவரெலியா மாவட்ட அரசியல் தலைவர்கள் முன்வந்து தீர்த்து தர வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாகாண சபை தேர்தலுக்கோ அல்லது வேறு எந்த தேர்தலுக்காகவோ தோட்டத்தின் பக்கம் வரக்கூடாது அவ்வாறு வந்தால் தாங்கள் மாற்று நடவடிக்கை எடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கும் அதே வேளை இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து தோட்ட காணியை பெற்றுக்கொடுக்காவிட்டால் டிக்கோயா தோட்டத்திற்கு சேர்ந்த அத்தனை பிரிவினையும் வீதிக்கு கொண்டு வந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!