நுவரெலியாவில் 291 குடும்பங்கள் இடம்பெயர்வு – நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு – மின்சாரம் துண்டிப்பு – போக்குவரத்து பாதிப்பு !

0
108

சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் மூன்று வான்கதவுகள் 17.08.2018 அன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் அதிகளவிலான நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் 16.08.2018 அன்று காலை முதல் மாலை வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் 17.08.2018 அன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்டு மொத்தமாக மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை போன்ற பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது.

பிரதான வீதிகள், பெருந்தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதியின் குடியிருப்பு பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றது.

இதுவரை நுவரெலியா மாவட்டததில் மூன்று பிரதேச செயலக பகுதிகளில் 291 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. நுவரெலியா, வலப்பனை, அம்பகமுவ போன்ற பிரதேச செயலக பகுிகளில் இவ்வாறாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம் பண்டார தெரிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவிலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

17.08.2018 அன்று இரவு அட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்ட நிலையில், சரிந்து விழுந்த மரத்தினை உடனடியாக அகற்றி வீதியின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நானுஓயா சமர்செட் பகுதியில் நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்றீம் தோட்டத்தில் குடியிருப்பு ஒன்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

அதேவேளை, அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்டப்பட்ட பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 5ற்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் சமர்வில் மற்றும் கோட்லோஜ், ஜெயலங்கா பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் இப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சீர் திருத்த பணிகளை நுவரெலியா மின்சார சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்- எஸ் .சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here