சம்பள பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாவிட்டால் தோட்டங்களுக்கு சொந்தகாரர்கள் தொழிலாளர்கள் என்ற வகையில் அடுத்த கட்ட முடிவுக்கு செல்லவுள்ளோம் – ரமேஷ்வரன் தெரிவிப்பு…

0
87

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் இறுதி பேச்சுவார்த்தை ஒன்றுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் தயாராகி வருகின்றது.இந்த பேச்சுவார்த்தையில் இறுதியாக ஒரு முடிவு எட்டப்படாவிட்டால் தோட்டங்களுக்கு சொந்தகாரர்கள் தொழிலாளர்கள் என்ற வகையில் அடுத்த கட்ட முடிவுக்கு செல்லவுள்ளதாக மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், தமிழ் கல்வி அமைச்சருமான எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிட திறப்பு விழா 26.09.2018 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சம்பள உயர்வு விடயத்தில் கடந்த காலங்களை போல அல்லாது இம்முறை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் இணைந்து முதன் முறையாக நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்ததன் பின்பு முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றோம்.

இதன்போது பேச்சுவார்த்தை மேசைக்கு வருகை தந்த பெருந்தோட்ட கம்பனிகளிடம் நாம் பிச்சை கேட்க சென்றது போல 53 ரூபாவை சம்பளமாக உயர்த்தி தருவதாக ஆரம்பத்திலேயே தெரிவித்தனர்.

இதனால் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இதற்கு மேல் தர முடியாத என்று கேட்டுவிட்டு உடனடியாக வெளியேறினார். இவ்வாறு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் கம்பனிகாரர்கள் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளிநடப்பு செய்ததை சிலர் விமர்சனம் செய்து தொண்டமான் அமர்ந்து பேசியிருந்தால் சம்பள உயர்வு கிடைத்திருக்கும் என பொது மக்களிடம் ஒரு கதையும், அவர்களுக்குள் ஒரு கதையும் தெரிவித்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் உழைப்பில் கிடைக்கும் இலாபத்தை கொண்டு கம்பனிகாரர்கள் இலட்சக்கணக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்வதுடன் சொகுசான வாகனங்களிலும், சென்று சுபபோக வாழ்க்கையை வாழ்கின்றனர்.

தொழிலாளர்கள் உழைக்காமல் இதை அவர்கள் அனுபவிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர். தொழிலாளர்களுக்காக பிச்சை கேட்க போகவில்லை. மாறாக உழைப்பிற்கான ஊதியத்தை கேட்டே சென்றோம்.

காலை முதல் மாலை வரை காடு மேடு ஏறி அட்டைக்கடியில் அவதிப்பட்டு உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை கேட்க சென்றால். பிச்சை போடுவது போல் 53 ரூபாவை சம்பள உயர்வாக தருவதாக தெரிவிக்கின்றார்கள்.

இதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே அரசியல் ரீதியில் வேறுபாடுகள் இருந்தாலும் சமூக ரீதியில் சமூகத்திற்கான பிரச்சினையை தீர்க்க ஒன்றுப்பட்ட சக்தியாக அணைவரும் மாறா கூடிய இந்த நிலையில் இறுதியாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள உள்ளோம்.

அப்பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படவில்லை என்றால் தோட்டத்தின் சொந்தகாரர்கள் என்ற வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுவது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களிடத்திலும் பேசப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here