கால்நடைகளை வைத்து ; மகன் இந்தியாவில் ஜல்லிக்கட்டு, தந்தை இலங்கையில் சல்லிக்கட்டு திலகர் சாடல்!

0
113

தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சு பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கான அதிகார சபையை கொண்டுவந்துள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாக அமைச்சுப்பதவியை வைத்திருந்தவர்கள் கால்நடை அமைச்சையும் கால்நடை அபிவிருத்தி சபையையுமே வைத்திருந்தனர். இன்று கால்நடை அபிவித்தி சபை தலைவருக்கு என்ன நடந்துள்ளது என எல்லோருக்கும் தெரியும். ஊவா மாகாண அமைச்சர் செந்தில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்.அவரது தந்தையார் முத்துவிநாயகம் இங் கே சல்லிக்கட்டோடு விளையாடுகிறார். இரண்டு விளையாட்டுகளுமே கால்நடைகளை வைத்துக்கொண்டுதான் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியீட்டத்தில் மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் தோட்டத்தில் நாற்பது வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஶ்ரீதரன், பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் சுரேஷ்,அசோக்,அர்ஜூன், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த தோட்டத்தின் பெயரைப் பாருங்கள். குயின்ஸ்லேண்ட். அப்படியாயின் இது ராணியின் நிலம் என்று பொருள்படுகிறது. உண்மையில் நூற்றாண்டு காலமாக இங்கிலாந்து ராணியின் ஆட்சியிலேயே நாம் இருந்தோம். இந்தப் பெருந்தோட்டங்கள் அவர்களின் உடமைகளாகவே இருந்தன. அதனால்தான் பெயர்களும் அவ்வாறு உள்ளது. ஆனாலும், ராணியின் நிலத்தை எமது மக்களின் நிலமாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் திகாம்பரம் அறிமுகப்படுத்தியுள்ளார்.மஸ்கெலியா நகருக்கு அருகாமையில் தோட்டத் தொழிலாளர் குடும்பம் தலா ஏழு பேர்ச்சஸ் வீதம் நாற்பது காணித்துண்டுகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும், அதில் அவர்களுக்கு தனிவீடுகள் பெறுகிறார்கள் என்பதும் அந்த மக்கள் அளித்த வாக்குகளுக்கு கிடைத்த பெறுமதிமிக்க பிரதியுபகாரமாகும்.

இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தவே நாங்கள் பிரதேச சபை சட்டத் திருத்தத்தை கொண்டுவரவும் , புதிய அதிகார சபை சட்டத்தை கொண்டுவரவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். இன்று அதில் வெற்றியும். பெற்றுள்ளோம். அந்த சட்டம் பற்றி விளக்கங்களை நான் ஊடகங்கள் வாயிலாக சரளமான மொழியில் எழுதியும் பேசியும் வருகிறேன். நீங்கள் அவற்றை கவனமாக படித்து தெரிந்து கொள்வதோடு மற்றையவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும். இது நமது உரிமையை வென்று எடுப்பதற்கான சட்டம். இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே நாம் நமது உரிமைகளை வென்று எடுக்க முடியும்.

இவ்வாறு நாம் உரிமையை மீட்க மக்களுக்கான அதிகார சபைகளை வென் றெடுக்கின்றபோதும், எந்தவொரு கூட்டுத்தாபனத்திலோ, சபையிலோ தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பதவி வாங்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை அமைச்சையும் கால்நடை அபிவிருத்தி சபையையுமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுப் பெற்று வந்தது. இப்போதைய ஆட்சியில் பங்காளிகளாக இல்லை என்பதுபோல காட்டிக்கொள்பவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக இந்த கால்நடை அபிவிருத்தி சபைத் தலைவர் பதவியை மன்றாடி கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் கடந்த காலத்தில் அங்கு நடைபெற்றவை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வதற்கு. ஆனாலும் பாடிய வாயும் ஆடிய கால்களும் சும்மா இருக்காது என்பது போல பழையதை மறைக்க அனுப்பியவர் இன்று புதிய விளையாட்டையும் காட்டி இப்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர்தான் முத்து விநாயகம்.

யார் இந்த முத்து விநாயகம்? அமர்ர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1947 ஆம் ஆண்டில் ஏழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து பெருமை சேர்த்தவர். மக்களுக்கு பல பணிகளை செய்தவர். அவருக்கு பின்னால் வந்தவர்கள் எல்லோரும் மக்களுக்கு பணியாற்றுவதற்கு பதிலாக அவரின் பெயரின் பிற்பகுதியை வைத்துக்கொண்டு அரசியல் லாபம் தேடியவர்கள். இன்று கைது செய்யப்பட்டிருப்பவர் அவரது பேரனும் இராமநாத தொண்டைமானின் மருமகனும் ஆறுமுகன் தொண்டமானின் மைத்துனரும் ஜீவன் தொண்டமானின் மாமனாரும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமானின் தந்தையும் என நீண்ட பட்டியலை எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்கள். ஆனால், கைது செய்யப்பட்ட இவரது பெயரை மட்டும் முத்து விநாயகம் என சுருக்கிக் கொண்டுள்ளார்கள். மகன் பெயர் செந்தில் தொண்டமான் என்றால் அப்பா பெயர் முத்து விநாயக தொண்டமான் என்றுதானே வரவேண்டும் என இணையத்தில் ஒரு ஊடகம் கேள்வி எழுப்பி இருக்கிறது. கால்நடைகளை வைத்துக்கொண்டு ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்.அவரது தந்தை முத்து விநாயக தொண்டமானோ அதே கால்நடைகளை வைத்துக்கொண்டு இலங்கையில் சல்லிகட்டு விளையாட்டு விளையாடுகிறார் என்றும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் – எஸ் .சதீஸ் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here