தலவாக்கலையில் அதிக விலையில் உணவு பொதிகள்- பொதுமக்கள் விசனம்

0
136

தற்போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இதுவரை ஏற்படுத்தப்பட்வில்லை.அத்தோடு சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகங்களிலுள்ள சிற்றுண்டிகள் – உணவுப் பொதிகளின் விலைகளிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தாத நிலையில் தலவாக்கலையில் மாத்திரம் உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமானதா? இதற்கு அனுமதி வழங்கியது யார்?

தலவாக்கலையில் உள்ள உணவகம் ஒன்றில் சைவ சாப்பாடு (மரக்கறி ) பொதி ஒன்று ரூ 150 இற்கு விற்கப்படுகிறது சில தினங்களுக்கு முன் குறித்த உணவகத்தில் ரூ 130 இற்கே மரக்கறி சாப்பாடு பொதி விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தலவாக்கலை நகரில் உள்ள ஏனைய உணவகங்களில் மரக்கறி உணவுப் பொதி ரூ 120 இற்கே விற்கப்பட்டு வருகிறது.

விழாக் காலங்களின் போது குறித்த உணவக நிர்வாகம் உணவுப் பொதிகளின் விலையினை தன்னிச்சையாக அதிகரிக்கின்றமைக்கு அனுமதி வழங்கியது யார் என பொது மக்கள் கேட்கின்றனர். குறிப்பாக இந்நகரத்திலுள்ள கோவில் உற்சவங்களின் போது உணவுப் பொதியின் விலையை திடீரென அதிகரிப்பது முறையானதல்ல. அத்தோடு தற்போது சபரிமலை ஐப்பன் யாத்திரிகள் அதிகமாக தலவாக்கலைக்கு வருகை தருவதனால் குறித்த உணவகத்தில் மாத்திரமே உணவு பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதே வேளை சிற்றுண்டிகளும் அதிக விலைகளுக்கே சில உணவகங்களில் விற்பனையாகின்றன.

எனவே தலவாக்கலை நகரில் இயங்கும் உணவகங்களின் சிற்றுண்டிகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை கொண்டு வர வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக தலவாக்கலை – லிந்துலை நகர சபை பாராமுகமாக இருப்பது ஏன் என்றும் பொது மக்கள் வினா எழுப்புகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி தலவாக்கலையில் சிற்றுண்டிகள் – உணவுப் பொதிகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அதனை மீறும் உணவகங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொது மக்கள் தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு தலவாக்கலை நகரிலுள்ள உணவகங்களின் நிலைமை மற்றும் அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் குறித்த நகரசபையோ பொது சுகாதார பரிசோதகர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது அலட்சிய போக்குடன் செயற்படுகின்றமை குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவரே இது உங்களின் கவணத்திற்கு…..

நன்றி-   சத்தியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here