முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளமும் தடைப்பட்டுள்ளது – சீ.பி.ரத்னாயக்க!

அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளமும் தடைப்பட்டுள்ளது – சீ.பி.ரத்னாயக்க!

அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பம் கைநழுவிப் போயிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில் புதிய அரசியல் மாற்றங்களால் சகல நடவடிக்கைகளும் தடைப்பட்டிருப்பதாக பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்தவன் என்ற ரீதியில் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனி முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்ததுடன், ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புத் தொடர்பில் இன்றையதினம் (நேற்று) இறுதி முடிவு எடுப்பதாக இருந்தது. எனினும், புதிய அரசியல் மாற்றத்தினால் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பம் கைநழுவிப்போய்விட்டது என்றார்.

எனினும், தாம் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருவோம் என சிலர் கூறத் தொடங்கியுள்ளனர். கடந்த மூன்றரை வருடங்களில் உரிய சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் தற்பொழுது அதனைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலை முகங்கொடுக்கப் பயந்தே இவ்வாறான முடிவை எடுத்துள்ளனர். “சும்மா தேர்தலுக்குச் செல்ல சுமந்திரனுக்கு முடியாது” என்றும் அவர் கூறினார்.

வடக்கில் சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பிலானவர்கள் தமக்குப் போட்டியாக உருவெடுத்திருப்பதால் ஓர் ஆசனத்தைக் கூடப் பெறுமுடியாது என்ற நிலையில் தேர்தலை நடத்த கூட்டமைப்பினர் விரும்பவில்லை. அதேபோல், ஜே.வி.பியினரும், ஐக்கிய தேசிய முன்னணியினரும் அச்சம் காரணமாக தேர்தலை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது விரைவில் வெளியாகும். இதுபோன்ற சம்பவங்களால் நாட்டை வேறு திசையில் திருப்புவதற்குச் சிலர் முயற்சிக்கின்றனர். எனினும் சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்துள்ளனர் என்றார்.

Leave a Reply

error: Content is protected !!