முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசியல் குளிர்காய மஹிந்த அணி முயற்சி!

தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசியல் குளிர்காய மஹிந்த அணி முயற்சி!

11 வருடங்கள் பதுங்கியிருந்தவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பு

பந்துல, சி.பி.ரட்னாயவுக்கு வேலுகுமார் எம்.பி. சபையில் பதிலடி

2004 முதல் 2015 வரையான 11 ஆண்டுகாலப்பகுதியில் மஹிந்தவின் ஆதிக்கமே ஆட்சி மற்றும் அரச நிர்வாகக் கட்டமைப்பில் கோலோச்சியிருந்தது. ஆறுமுகன் தொண்டமான், பந்துல குணவர்தன, சி.பி. ரத்னாயக்க ஆகியோரும் மஹிந்தவின் அமைச்சரவையில் பதவிகளை அலங்கரித்தனர். இவ்வாறு ‘அதிகாரம்’ தமது கைகளுக்குள் இருக்கும்போது தோட்டத்தொழிலாளர்களை புறந்தள்ளிசெயற்பட்ட அவர்கள் , குறுகிய அரசியல் இலாபத்துக்காகவே இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) புதன்கிழமை நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘’ புதிய அரசின் அமைச்சரவை செயற்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்காவிட்டால் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று சி.பி. ரத்னாயக்க, பந்துல குணவர்தன ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு மஹிந்த பிரதமராக தெரிவானார். 2005 ஆம் ஆண்டுமுதல் 2015 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி பதவியிலும் நீடித்தார். மேற்படி இரு உறுப்பினர்களும், ஆறுமுகன் தொண்டமானும் மஹிந்தவின் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தனர். இக்காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களுக்காக இவர்களால் முற்போக்கு சிந்தனையுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டத்தையாவது குறிப்பிட முடியுமா?

11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள். அண்மையில்கூட சூழ்ச்சிமூலம் ஆட்சியைப்பிடித்தவர்கள். அதிகாரம் தமது பக்கம் இருக்கும்போது தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர் சுயநல அரசியலுக்காக – சுடலைஞானம் பிறந்தாற்போல் தொழிலாளர்கள் பற்றி பேசுகின்றனர்.

நாட்டில் தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கமோ அல்லது அமைச்சரலையோ இயங்கவில்லை. வகைகூருவதற்குரிய மூன்றாம் தரப்பு முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் அப்பாவித் தொழிலாளர்களை வீதிக்கு இறக்குவது தவறான அரசியல் அணுகுமுறையாகும். எனவே, பொருத்தமற்ற சூழலில் – நெருக்கடியான நிலையில் மக்களை வீதிக்கு இறக்கி பலிகடாவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, சூழ்ச்சி அரசு விரட்டப்பட்டு, நல்லாட்சி அரசு சட்டபூர்வமாக பதவியேற்றப்பின்னர், புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் எமது தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான இலக்காக இருக்கும்’’ என்றார்.

Leave a Reply

error: Content is protected !!