விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை ஆயிரம் கிட்டும்வரை போராட்டம் தொடரும்; ஆறுமுகன் அறிவிப்பு!

0
98

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. இலக்கை அடைய வேண்டும் என்பதால் அழுத்தம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என தெரிவிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மக்கள் மத்தியில் சென்று கேட்டபொழுது இந்த போராட்டத்தை மக்களும் ஏற்றுக்கொண்டனர் என உறுதிப்பட தெரிவித்தார். அத்தோடு சில தொழிற்சங்கங்கள் தற்பொழுது இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் முன்வந்துள்ளார்கள். இது மகிழ்ச்சி குரிய விடயம். ஆகையால் இவ் போராட்டம் வெற்றிப்பெறும் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கை உண்டு எனவும் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் 09.12.2018 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஆயிரம் என்ற குறிக்கோளிலிருந்து இ.தொ.கா மாறுப்பட போவதில்லை. மாறாக எம்மிடம் கடைசியாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மேலதிக கொடுப்பனவுகள் இணைத்ததாக 925 ரூபாய் என்ற அடிப்படைக்கு வந்தார்கள்.

இந்த தொகை தொழிலாளர்களுக்கு போதுமான தொகையாக இல்லை. இதை அணைவரும் உணர்வார்கள். ஆகையினால் மேலும் எமது ஆயிரம் ரூபாய் இலக்கை நோக்கிய பயணத்திற்காக அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த பணிபகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 6 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் வேறு எந்த பிரச்சினைகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் கடந்த முறை ஒன்றரை வருடங்களாக அதவாது 18 மாதங்கள் பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் போது வழங்கப்பட வேண்டிய நிலுவை பணம் அதிகம் என்பதனால் இதனை வழங்க மறுத்தனர். இதற்கு வேறு காரணங்களும் இருந்தது.

ஒக்டோபர் 26ம் திகதி ஒரு பேச்சுவார்ததை இருந்த நிலையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டு குழப்ப நிலை உருவாகியது காரணமாக அன்றைய தினம் இந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இருந்த போதிலும் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவு எல்லைக்கு வராததன் காரணமாக பணிபகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் இந்த வேளையில் நாளை (10.12.2018) கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்த அவர், பணிபகிஷ்கரிப்பு தீர்வு எட்டப்படும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று தோட்ட தொழில் ஈடுப்படும் ஆண் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு பணிக்கு செல்வது தோட்டங்களில் குறைவான ஊதியம் கிடைப்பதனால் ஊதிய உயர்வை வழங்கும் பொழுது இவர்களும் தோட்ட தொழில்களில் தொடர்ந்தும் ஈடுப்பட்டு தோட்டங்களை பலமாக்க முடியும்.

அதேநேரத்தில் கம்பனிகள் எப்போது தோட்டங்களை பொறுப்பேற்றதோ அதிலிருந்து குறுகிய காலப்பகுதிக்கு அப்பால் வளமான தேயிலை நிலங்கள் காடுகளாக்கப்பட்டு வந்துள்ளது.

தோட்ட தொழிலை தெரிந்து முன்னெடுக்கும் திறமை மிக்க தோட்ட அதிகாரிகள் இன்று இல்லை. இராணுவத்திலிருந்து விலகியவர்களும் கூட இன்று தோட்ட அதிகாரிகளாக இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் பெருந்தோட்டங்கள் நஷ்டம் அடைவதற்கான அளவிற்கு அவர்களே உருவாக்கி கொண்டார்கள். திறமையான தோட்ட அதிகாரிகளை நியமித்து எதிர்வரும் காலங்களில் தோட்டங்களை பலமாக்க முடியும். கம்பனிகாரர்களால் தோட்டங்களை கொண்டு செல்ல முடியாது என்றால் அரசுக்கு பொறுப்பு கொடுத்து வெளியேறும் படி அன்றிலிருந்து நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதேநேரத்தில் நாட்டினுடைய அரசியல் நிலைக்கும் நீதிமன்றத்தின் ஊடான எதிர்பார்க்கும் தீர்ப்புக்கும் சம்மந்தம் இல்லாத விடயம் தான் இந்த சம்பள பிரச்சினை. மக்கள் மத்தியில் சென்று பெயர்போட்டு கொள்வதற்காக சிலர் எம்மை அவ்வப்போது தொட்டுக் கொள்கின்றார்கள்.

இன்றைய நிலையில் நாம் போராட்டம் வடிவம் ஒன்றுக்கு வந்துள்ளமையை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த சம்பள விடயத்தில் ஊடகங்களுக்கும் பொறுப்புகள் உண்டு. ஆயிரம் ரூபாவை அடைவதற்காக ஊடகங்கள் அவர்களின் கையில் உள்ள பேனாவும் உதவி புரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்- எஸ் .சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here