சம்பள பேச்சுவார்த்தை தோல்வி என வர்ணிக்கப்பட்டு தோட்டப்பகுதிகளில் போராட்டங்கள்!!

0
81

நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெற்றுத்தர வேண்டும் என கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த 4ம் திகதி முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் ஜனாதிபதி ஊடாக பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கப்போவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் திங்கட்கிழமை ஜனாதிபதியூடான பேச்சுவார்த்தை இடம்பெறாத பட்சத்தில் செவ்வாய்க்கிழமை 11ம் திகதி இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் 19ம் திகதி சம்பளம் தொடர்பில் உரிய தீர்வை பெற்று தருவதாக இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக மேற்கோள் காட்டி கடந்த 8 தினங்களாக மேற்கொண்டிருந்த பணிபகிஷ்கரிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு தொழிலாளர்களை தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்கள் ஊடாக பணித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4ம் திகதி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்ப்பு எட்டவில்லை எனவும், பொருளாதாரத்தில் எம்மை கடந்த 8 தினங்களாக பாதிப்படைய செய்துள்ளார் எனவும், எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறும் பேச்சுவார்த்தையும் நல்ல தீர்வை எட்டி தராது என்ற அச்சமும் எமக்கு நிலவுவதால் 12.12.2018 அன்று இ.தொ.கா மீது நம்பிக்கை இழந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களான தொழிலாளர்களும், ஒரு சில தோட்டப்பகுதிகளில் இ.தொ.காவின் அங்கத்தவர்களும் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

அந்தவகையில், தலவாக்கலை மடக்கும்புர தோட்டத்தில் தொழிற்சாலைக்கு முன்பாக 12.12.2018 அன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் “தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இராட்சத அட்டை” என ஆறுமுகன் தொண்டமானை வர்ணித்து அவரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டினர்.

அத்தோடு மீசைக்கார அண்ணாச்சி ஆயிரம் ரூபாய் எண்ணாச்சி என சுலோகங்களை எழுதி ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை அட்டன் பகுதிகளிலும் செனன் மற்றும் எபோட்சிலி ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிராகவும், காங்கிரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் லெட்சுமி தோட்டம், பொகவந்தலாவ ஆகிய தோட்டத்திலும், டிக்கோயா சாஞ்சிமலை தோட்டத்திலும், மஸ்கெலியாவில் சில தோட்டப்பகுதிகளிலும், டயமக பிரதேசத்தில் நகரங்களிலும், தோட்டப்பகுதிகளிலும் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லிந்துலை கொணன் தோட்டத்தில் தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் இவ்வாறாக சில தோட்டப்பகுதிகளில் வழமையான தொழிலுக்கு தொழிலாளர்கள் சென்றிருந்தனர். நுவரெலியாவில் அனைத்து தோட்டப்பகுதிகளிலும் இன்றும் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்திருந்தது.

இந்த போராட்டத்தை இ.தொ.காங்கிரஸ்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்வரும் காலங்களில் தைப்பொங்கல் விழா, பாடசாலை மாணவர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான ஆரம்ப தவணைக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வாங்குதல் இதுபோன்ற பல விடயங்களில் தொழிலாளர்களை பாதிப்புக்குள்ளாக்குவதாக இதனை ஈடு செய்ய சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கவில்லை எனவும், சம்பள விடயத்தில் ஒட்டுமொத்த தோட்ட தொழிலாளர்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏமாற்றி விட்டது என கோரிக்கை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதேநேரத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கூற்றை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு எதிர்ப்பான தொழிற்சங்கங்கள் பல அவர்களின் அங்கத்தவர்களை தூண்டி விட்டு போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரியவந்துள்ளது.

இருந்தபோதிலும், ஜனாதிபதியின் வலியுறுத்தலுக்கு அமைவாகவும் நாட்டின் அரசியல் சூழ்நிலை கருத்திற்கொண்டும் எதிர்வரும் 19ம் திகதி வரை பொருமை சாய்க்கும் நிலையில் பணிபகிஷ்கரிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் இ.தொ.கா மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை சாடியவாறு சில சக்திகளினால் தொழிலாளர்கள் தூண்டப்பட்டு போராட்டங்களை ஒரு கட்சிக்கு எதிராக செய்யப்படுவதாக பரவலான பேச்சு இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

DSC00307 DSC00306 DSC00271

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here