பண முதலைகளின் வலையில் சிக்கியுள்ள தொழிலாளர் வர்க்கம்!

0
119

புதிய மலையகம் வாசகர்களுக்கு வணக்கம். புதிய மலையகம் வலைத்தளமானது, சமீபகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் சில தகவல்களை வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளது.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல்வேறு பரிணாமங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைக்குமா என்பது ஒருபுறமிருக்க, பணம் படைத்த முதலாளிமார் முதலைகளின் வலையில் தொழிலாளர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையிலான சூட்சுமமான திட்டங்களும் தீட்டப்படுகின்றன.

இதில், மக்கள் சார்பான ஊடகம் எனத் தம்மை காட்டிக்கொள்ளும் பண முதலைகளின் சித்து விளையாட்டுக்களும் இடம்பெற்று வருகின்றன.

நிற்க, கிளைபோசேட் எனப்படும் களை நாசினி, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலும் ஏனைய விவசாயத் துறைகளிலும் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்த விடயமாகும். இது, மாபெரும் வர்த்தகச் சந்தையிலும் தொழிலாளர் போராட்டங்களிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு கவனிப்போம்.

கிளைபோசேட் கிருமிநாசினியை உபயோகப்படுத்துவதால் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டு 2015, ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அதற்குத் தடை விதித்தது.

இது பெருந்தோட்டப் பகுதிகளில் உற்பத்திக்குப் பெரும் பாதிப்பாக அமைவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தது. தேயிலை, இறப்பர் தொழிற்துறைகளில் இதன் பாவனை தடை செய்யப்பட்டதால் வருடாந்தம் 20 கோடி ரூபாவரை நட்டம் ஏற்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் 2018, ஏப்ரல் 19 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க, கிளைபோசேட் கிருமிநாசினி மீதான தடையால் இலங்கையில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இது, மாமன்னர் (மாத்தி யோசி!) எனும் பணம் படைத்த முதலாளியின் மற்றுமொரு நிறுவனமாகும். SorcraH (மாத்தி யோசி!) என்ற இந்த நிறுவனம் முற்றுமுழுதாக மாமன்னரின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் பேரளவு இலாபமீட்டும் நிறுவனம்.

ஒருபுறம் கிளைபோசேட்டை தேயிலை, இறப்பருக்கு மாத்திரம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்து வந்த நிலையில் மறுபுறம் SorcraH நிறுவனமும் பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இரசாயனவியல் தயாரிப்பு தொழிற்சாலையொன்று ஜா-எல பகுதியில் இயங்கி வருகிறது. கிளைபோசேட்டை ஏனைய கிருமிநாசினிகளில் கலந்து விற்பனை செய்துவரும் செயற்பாடுகளும் அங்கு இடம்பெற்று வந்தன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற அழுத்தம் காரணமாக 2018, மார்ச் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியன இணைந்து ஆராய்ச்சிக் குழுவொன்றை அமைத்தன.

அந்தக் குழுவுக்கும் மேற்படி மாமன்னர் நிறுவனம் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வந்தது. பெருந்தோட்டத் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர், முதலாளிமார் சம்மேளனத்துடனும் மாமன்னர் நிறுவனத்துடனும் மிக நெருக்கமான உறவினைப் பேணி வருகிறார்.

இந்நிலையில், 2018, ஜுலை 11 ஆம் திகதி புதன் கிழமை 2079/37 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானியின் மூலம் தேயிலை, இறப்பர் பயன்பாட்டுக்கான கிளைபோசேட் பயன்பாட்டுத் தடை நீக்கப்பட்டது. தேயிலை, இறப்பர் துறைக்கு மாத்திரம் தடை நீக்கப்பட்டதற்கான காரணங்களை மேற்சொன்ன தகவல்களில் வெளிச்சமாகும்.

2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதத்தில் இலங்கை தேயிலைச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதாவது, கிளைபோசேட் தடை செய்யப்பட்டுள்ள போதும் அதற்கு இணையான வகையில் பல்வேறு களைநாசினிகள் பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த நாசினிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அனுமதி பெறாத களைநாசினியை பெருந்தோட்டப் பகுதிகளுக்கு விநியோகம் செய்ததும் நாம் மேற்சொன்ன தனியார் நிறுவனம் தான்.

இன்னும் ஒருபடி மேலே சென்றுச் சொல்வதானால், முதலாளிமார் சம்மேளனத்தின் இயக்கமும் அந்தச் சம்மேளனம் பெறும் இலாபமும் இந்த மாமன்னர் நிறுவனத்துக்கு அவசியமாகும். இதனை ஆங்கிலத்தில் Corporate Crime என்று சொல்லுவோம், White-collar crime என்ற வகைப்பாட்டுக்குள்ளும் அடக்கலாம்.

கிளைபோசேட் எனும் களைநாசினியினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் சிலவற்றை (பிரதானமானவை) பார்ப்போம்.

01. சிறுநீரகப் பாதிப்பு
02. தோல் வியாதிகள்
03. விந்து உற்பத்திப் பாதிப்பு
04. கர்ப்பிணிகளின் குழுந்தை வளர்ச்சியில் பாதிப்பு
05. சுவாசம் மற்றும் தொண்டை தொடர்பான நோய்கள்
06. அத்துடன் தேனீக்களின் பரவலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் சூழல்நிலையில் மேற்படி தனியார் நிறுவனத்துக்கு முதலாளிமார் சம்மேளனத்தை அரவணைத்துச் செல்லும் கடப்பாடு இயல்பாக ஏற்படுகிறது. இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதால் எந்தவொரு முதலாளியும் மக்கள் நலன்குறித்துச் சிந்திப்பதில்லை. அத்துடன் மாமன்னர் நிறுவனமானது, தனக்கு இலாபம் என்றால் எந்தவகையிலான சூழ்ச்சியையும் செய்வதற்குத் தயாராக இருக்கும் என்பது நாடறிந்த உண்மை.

சரி, மலையக பெருந்தோட்ட மக்களின் போராட்டத்தை திசை திருப்புவதற்கு ஏன் இந்த கோர்ப்பரேட் கம்பனிகள் முன்வர வேண்டும்?

ஆம்! பெரும் இலாபமீட்டும் பண முதலைகளான இவர்களுக்கு மக்கள் ஒற்றுமையாக இருப்பதோ அல்லது தனியொரு சக்தியாக உருவெடுப்பதோ விரும்பத்தகாத ஒன்றாகும். இங்கே ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில் கம்பனிகள் அடையும் சிறு இழப்பினையும் இழக்கவிடாமல் பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த முயற்சிகள் என்னவென்பதை, அண்மைக்காலப் போக்குகளைக் கொண்டு கணிக்க முடியும். மாமன்னரின் கைக்குழந்தையான நிகழ்ச்சி அரசியல்வாதியொருவருக்கொண்டு கணிக்க முடியும். மாமன்னரின் கைக்குழந்தையான நிகழ்ச்சி அரசியல்வாதியொருவருக்கு இதுவொன்றும் தெரியாத விடயமல்ல. ஆனாலும் வெளிவேசம் போடும் இவர்கள் போன்றோரை இனங்காண நம் சமூகமும் இளைஞர்களும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறான விடயங்கள், பின்புலத் திட்டமிடல்கள், சதி, சூழ்ச்சிகள் என்பவை சாதாரண பொதுமக்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள் எப்போதும் விசுவாசமுடையவர்களாகவும் உழைப்பை மாத்திரம் நம்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

எவ்வாறெனினும் இவை குறித்து முழு உழைப்பாளர் வர்க்கமும் தெளிவுபெற வேண்டும். நன்றியுள்ள நாய் வடிவத்தில் நம்முன்னே செயற்பட்டுக்கொண்டிருக்கும் குள்ளநரிகளை இனங்காணுவது காலத்தின் கட்டாயமாகும்.

(கூட்டுக் களவானிகளின் சூழ்ச்சியை இந்தக் கட்டுரை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். விழித்துக்கொள்ளுதல் என்பது எழுந்துகொள்ளல் மாத்திரமல்ல, அறிந்துகொள்ளுதலும் தான்.

இறக்குவானை நிர்ஷன்

நன்றி புதிய மலையகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here