மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் அட்டனில் இன்று (21.04.2022) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில் வைத்து தீயிட்டு கொளுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலக மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
அட்டன் ஸ்டிரதன் தோட்ட பகுதியைச் சேர்ந்த, பெருந்தோட்ட மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாது, போராட்டத்தில் இறங்கினர்.
அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் குவிந்த மக்கள், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பியவாறு, தமது உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தினர்.
இப்போராட்டத்துக்கு முன்னர், அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சொரூபத்திற்கு முன்பாக மக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் எனவும் பிரார்த்தித்தனர்.
(க.கிஷாந்தன்)