ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
குறித்த தன்னெழுச்சி போராட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் பங்கேற்றனர். ஆட்டோ ஓட்டுநர்களும் அணிதிரண்டுவந்து பேராதரவை வழங்கினர்.
தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு அருகில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், தலவாக்கலை, அட்டன் சுற்றுவட்டத்துக்கு பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர். அங்கு வந்த பிறகு சாலை மறியல் போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இதனால் பிரதான வழியிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.
ஆட்டோ ஓட்டுநர்களும் ‘ஹேன்’ களை அடித்தவாறு போராட்டக்காரர்களுக்கு ஆதரவை வழங்கினர்.
எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலையேற்றம் ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல ஜனாதிபதி பதவி விலகியே ஆக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
க.கிஷாந்தன்