அரசாங்கத்துக்கு எதிராக மெல்ல மெல்ல துளிர்விடும் போராட்டங்கள் – எதிர்க்கட்சிகள் போடும் திட்டம்

0
13

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்துள்ள சூழலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் மீண்டும் ஓரணியில் திரளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ரயில்வே ஊழியர்கள், தபால் ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பலக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இவற்றை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக மாற்றி எதிர்க்கட்சிகளை பலமடையும் செய்யும் முயற்சிகளும் திரைமறைவில் இடம்பெறுகின்றன.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இ.தொ.கா., மு.க, உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. ஒருசில கட்சிகள் மாத்திரம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிரணி ஒன்றின் அவசியம் குறித்து இந்த சந்திப்பில் அனைத்துத் தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

ஆனால், பொது இணக்கப்பாடொன்றை இவர்களால் எட்டிமுடியாத நிலையில் குறித்த சந்திப்பு நிறைவுற்றுள்ளது. என்றாலும், எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணியின் அவசியம் குறித்து அனைவரும் சாதகமான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

அரசாங்கம், தேசிய இளைஞர் சபை, உள்ளூராட்சிமன்றங்கள், கூட்டுறவு சங்கங்கள் உட்பட கிராமத்தின் பல்வேறு அதிகாரக் கட்டமைப்புகளின் பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால் எதிர்க்கால அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வலுவான எதிரணி அவசியமாகியுள்ளது.

அரசியல் பிணக்குகளுக்கு அப்பாலான ஓர் எதிரணி அவசியமாக உள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்துள்ளதால் இதனை எதிர்க்கட்சிகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பொது நிலைப்பாட்டை இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகள் எட்டியுள்ள போதிலும் இதுகுறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

விரைவில் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற உள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here