அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி நாட்டை மீட்போம் என கூறி ஆட்சியை கைப்பற்றுபவர்கள் மாறி மாறி சாதாரண மக்களின் வயிற்றிலேயே அடிப்பதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இப்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற செயல்திட்டங்கள் யாவும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் திட்டங்களாகவே அமைகின்றன.சாதாரண மக்கள் அதிகமாக பாண்,ரொட்டி உணவுகளையே உண்டு வந்தனர்.ஆனால் இன்று பாண்,கோதுமை மாவின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக பெருந்தோட்ட பகுதி மக்களே இன்று பெரும் கஸ்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதுமட்டுமல்ல பெருந்தோட்ட பகுதிகளில் இருவேளை உணவு உண்டு வாழும் அவல நிலமைக்கு இவ்வரசாங்கம் மக்களை தள்ளியுள்ளது.ஒருபக்கம் வறுமான பிரச்சனை,ஒருபக்கம் விலைவாசி உயர்வு,இன்னொரு பக்கம் பிள்ளைகளின் கல்வி என அடிக்கு மேல் அடிவாங்கி தலைநிமிர முடியாத சூழ்நிலையை இவ்வரசாங்கம் உருவாக்கியுள்ளது.
இதற்கு சரியான தீர்வை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் இல்லையேல் மக்கள் தீர்ப்பை வழங்கி விடுவர்.கடந்தகாலத்தை நினைவில் வைத்து அரசாங்கம் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்