இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர்

0
76

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) செயல்பட்டு வருகிறார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்துடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும், எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ) தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13ஆம் திகதி அழைப்பு விடுத்தது.

இதற்கான காலம் கடந்த மே 27 ஆம் திகதியுடன் முடிவுற்றது. இதன்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 3000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கிடையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்( Stephen Fleming) , டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங்(Ricky Ponting) , லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்(Lucknow Super Giants) அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்(Justin Langer) , குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா (Ashish Nehra) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் உள்ளிட்டோருடன் பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

ஆனால், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, எந்தவொரு முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) விளக்கம் அளித்தார்.இதனால், வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இதனிடையே, கௌதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வரும் திட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், இதுதொடர்பாக கௌதம் கம்பீர் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் மூத்த நிர்வாகிகளுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஐபிஎல் அணியின் முக்கிய நிர்வாகி கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கௌதம் கம்பீரின் நியமனம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் இது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 17ஆவது ஐபிஎல் T20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு ஆலோசகராக பணியாற்றிய கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக இருந்தார்.

கொல்கத்தா அணியின் ஆலோசகராக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே அவர் தனது அணிக்கு சம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார்.அவர் தலைமையிலான கொல்கத்தா அணி ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் சம்பியன் பட்டம் வென்றது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது அந்த அணி பிளே–ஆப் சுற்றிற்கு நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here