இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம், டி20 உலகக் கிண்ண தொடர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், இந்தத் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தான் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 1 முதல் 29 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
20 அணிகள்
குறிப்பாக இம்முறை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அணிகள், ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 8 பிரிவிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். ஜூன் 26 மற்றும் 27-ம் திகதிகளில் அரையிறுதி போட்டியும், அதை தொடர்ந்து ஜூன் 29-ம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.