உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மூலம் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே சக்திகள் இன்று இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர், என்று சிந்திக்க நேர்ந்து உள்ளது, என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மாநகர பிதா அதாவுல்லா அஹமட் ஷக்கியின் தலைமையில் அக்கரைப்பற்று புதிய நீர் பூங்காவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நாட்டின் 74வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சர்வ சமய பிரார்த்தனைகள்இ சுதந்திர போராட்ட வீரர்களுக்கான நினைவேந்தல், சர்வ இன கலாசார கலை நிகழ்வுகள் ஆகியவற்றோடு வெகுவிமரிசையாக இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை திருநாட்டில் இறைவன் அருளால் அனைத்து வளங்களும் நிறைய பெற்று இருக்கின்றன.
இதனால் உலக நாடுகளும், உலகில் உள்ள சண்டியர்களும் எமது நாட்டையும், எம்மையும் அடிமைப்படுத்தி வைத்திருக்க முயல்கின்றனர்.
எமக்கு 74 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எம்மை நிம்மதியாக வாழ விடுகின்றார்கள் இல்லை.
நாம் சுதந்திரம் அடைந்த பிற்பாடுகூட இந்த நாட்டின் அரசியல் அமைப்பு, பொருளாதார கொள்கை ஆகியவற்றில் வல்லரசுகள் தலையிட்டு கொண்டே உள்ளனஇ
இன ஒற்றுமை குலைக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக தாக்கப்பட்டவர்களாகவும், பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாதவர்களாகவும் நாம் தொடர்ந்தும் இருந்து வருகின்றோம்.
வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகள் தற்போது மிக தந்திரமான முறைகளில் நடத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
வெளிநாடுகளின் ஒத்திசைவோடு தான் ஈழ போராட்ட குழுக்கள் செயற்பட்டன. சகோதர படுகொலைகளும் நடந்தன.
உரிமையின் பெயரால் இரத்த ஆறு ஓடியது. மனிதர்களை மனிதர்கள் 35 வருடங்களாக கொன்றனர்.
இனவாதம், இன துவேசம், இன கலவரம் மூலம் நாட்டை கைப்பற்றுகின்ற பாரிய வியூகம் முன்னெடுக்கப்பட்டது.
சில முஸ்லிம்களையும், முஸ்லிம் ஆலிம்கள் என்கிற பெயரில் சிலரையும் குண்டுதாரிகளாக பாவித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தினார்கள். கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரிய செய்தனர்.
இவை திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று மக்களே தெட்ட தெளிவாக இன்று பேசி கொள்வதை செவிமடுக்க முடிகிறது.
அவ்விதம் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே சக்திகள்தான் இன்று இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க பகீரத முயற்சிகள் மேற்கொள்கின்றன.
அதன் ஒரு அம்சமே திருகோணமலையில் நடந்தேறுகின்றது. இந்துக்களையும், முஸ்லிம்களையும் மூட்டி விட பார்க்கின்றனர்.
எதிர்கால செல்வங்களான பாடசாலை பிள்ளைகளின் மனங்களில் இப்போதே இனவாதம் விதைக்கப்படுகின்றது. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.
ஒரு இனத்தவரின் உடை, உணவு, கலாசாரம், சமயம் சார்ந்த சுதந்திரங்களை மற்றைய இனத்தவர்கள் மதிக்க வேண்டும்.
எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் என்று வாழ வேண்டும், என தெரிவித்தார்.