இனவாதத்தாலும் அனுதாபத்தாலும் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை

0
200

நாட்டில் இனவாத கருத்துக்களைப் பரப்பி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுபோலவே மலையகத்தில் அனுதாப வாக்குகளால் வென்று வெறும் இராஜாங்க அமைச்சை பெற்றவர்களுக்கும் மலையக மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராக இன்று தலவாக்கலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது:

மலையக மக்கள் சிலர் அன்று அனுதாபத்திற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று இந்த அரசாங்கத்தில் இருந்து இந்த மக்களுக்கு அனுதாபம் கூறக் கூட ஒருவரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரிசி விலை உயர்ந்தால் மலையக மக்கள் மீது அனுதாபம் காட்ட அரசாங்கத்தில் யாருமில்லை.

சீனி இல்லையென்றால் மலையக மக்கள் மீது அனுதாபம் காட்ட அரசாங்கத்தில் யாரும் இல்லை.

கேஸ் விலை அதிகரித்தால் மலையக மக்கள் மீது அனுதாபம் காட்ட அரசாங்கத்தில் யாரும் இல்லை.

கோதுமை மா விலை மண்ணெண்ணெய் விலை அதிகரித்தால் மலையக மக்கள் மீது அனுதாபம் காட்ட அரசாங்கத்தில் யாருமில்லை.

பெருந்தோட்டக் கம்பனிகள் அச்சுறுத்தினால் அதனை தட்டிக் கேட்க அரசாங்கத்தில் யாரும் இல்லை.

ஆயிரம் ரூபா சம்பளத்தை கொடுத்ததாக பெயர் போட்டுக்கொள்ள ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால் ஆயிரம் ரூபா பெறுவதில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்கு அரசாங்கத்தில் யாரும் இல்லை.

உரம் பற்றாக்குறையால் மலையக இளைஞர் யுவதிகள் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். அவர்களுக்கு அனுதாபம் கூற அரசாங்கத்தில் யாரும் இல்லை.

ஆகவே அனுதாப வாக்குகளை அளித்ததால் இன்று அனுதாபமே இல்லாத நிலைக்கு மலையக மக்கள் இந்த அரசாங்கத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு சொல்ல முடியாத அளவு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு ஏற்ற வருமானம் இல்லை. ஏற்கனவே பெற்ற வருமானம் தற்போது குறைவடைந்துள்ளது.

அதனால் இந்த அரசாங்கம் பொருட்களின் விலையை அதிகரிக்காமல் பொருட்களின் விலையை குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஒருபோதும் இந்த அரசாங்கத்தில் இருந்து நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி சலுகை வழங்குவதையும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கிறார்களே தவிர நாட்டு மக்களின் வாழ்வாதாரம் எதிர்காலம் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.

எனவே இந்த மோசமான அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விரட்டி அடிப்பதோடு மலையகத்தை பீடித்துள்ள தீய சக்தியையும் நாங்கள் ஒன்றிணைந்து விரட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.

மலையக மக்களுக்காக அனுதாபப் பட அரசாங்கத்தில் யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களுடைய மக்கள் தொடர்பாக அனுதாபப் படவும் அவர்களுக்கு கை கொடுக்கவும் அவர்களுக்காக குரல் கொடுக்கவும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

எனவே நாட்டு மக்களும் சரி மலையக மக்களும் சரி இனி தெளிவாக விழித்துக்கொண்டு அடுத்து வரும் காலங்களில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே நாட்டுக்கும் மலையகத்திற்கும் சுபிட்சத்தை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here