இன்றுடன் விஜய்யிடம் சிபிஐ விசாரணை முடிவு பெறாது?

0
7

கரூர் கூட்ட நெரிசல்: கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்களுக்கு ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்ட நிலையில், விஜய் தரப்பிலிருந்து அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரித்து வருகின்றது.

கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்யிடம் கடந்த ஜன. 12 ஆம் தேதி 6 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது, வாகனத்தில் நின்று பேசும்போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா?, 7 மணிநேரம் தாமதம் ஏன்?, கூட்ட நெரிசலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, நெரிசலில் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்தியது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்த நிலையில், சில கேள்விகளுக்கு அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விஜய் அளித்த சில பதில்களுக்கு சிபிஐ தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்றுடன் விஜய்யிடம் விசாரணை முடிவு பெறாது எனத் தெரிகின்றது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here