இன்று முதல் நாட்டில் அனைத்து வீதி விளக்குகளை அணைக்க வேண்டுகோள்!

0
142

நாட்டில் வீதி விளக்குகளை அணைத்து வைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (07) முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, ஶ்ரீ.ல.பொ.பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 30% நீர் மின்சார உற்பத்தி மழையின்மை காரணமாக முழுமையாக செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதனை ஈடு செய்ய எரிபொருளை பயன்படுத்துவதால் பாரிய செலவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அசாதாரணமான வகையில் அதிகரித்து வருவதோடு, அது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் எதிர்வுகூறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் டொலர் கையிருப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றமையான இவை அனைத்தையும் மேலும் சிக்கலாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சவாலான நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக காணப்படுகின்ற ஒரே வழி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதாகும். அதனை முன்னோடியாகக் கொண்டு சமூகத்தில் அதனை நடைமுறைப்படுத்த, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு இன்று முதல் மார்ச் 31ஆம் திகதி வரை, தங்கள் வசம் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வீதி விளக்குகளை அணைக்குமாறு வேண்டுகோள் விடுவிப்பதாக பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு குறைந்தளவிலான பாதிப்புடனான, மின்சாரத்தை சேமிப்பது தொடர்பில் தங்களால் முன்னெடுக்கக் கூடிய மாற்று வழிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்தி, அது தொடர்பில் தனக்கு அறிவிக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here