நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் கிவ் மேல் பிரிவு தோட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புதிய மின் கம்பங்கள் ஊண்டியும் குறித்த மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாது பழைய மின் கம்பத்தில் மிகவும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களில் காணப்படுவதனால் அந்த தோட்டத்தில் வாழும் சுமார் 700 பேர் வரை ஆபத்தான் நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கிவ் மேல் பிரிவு தோட்டத்தில் சுமார் 120 வது குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் முதல் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த தோட்டத்தில் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மரத்திலான மின் கம்பங்கள் ஊண்டப்பட்டு மின் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கம்பங்கள் தற்போது அடியில் இத்துப்போய் உடைந்து விழும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இந்த விடயம் குறித்து அங்குள்ள கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டதனை தொடர்ந்து குறித்த மின் கம்பங்களை மாற்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய மின் கம்பங்கள் ஊண்டப்பட்டுள்ளன.
எனினும் குறித்த புதிய மின் கம்பங்களில் மின் இணைப்பு செய்யாது உள்ளதன் காரணமாக அந்த மின் கம்பங்கள் உடைந்து வீழ்ந்து தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புக்கள் தீபற்றி எரியக்கூடிய ஆபத்து காணப்படுவதாகவும்,இதனால் தங்களுடைய உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்திருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தொடர் குடியிருப்புகளில் உள்ள கூரையின் மீது தற்போது மின் இணைப்பு வயர்கள் தகரத்துடன் உரசிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறான போதிலும் மின் ஒழுக்கு காரணமாக மலையகத்தில் உள்ள பல தோட்டங்களில் வீடுகள் தீப்பிடித்து உடைமைகள் அழிந்துள்ளதனால் இதனை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்பதனை சுட்டிக்காட்ட வேண்டியது கட்டாயமாகும்.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த பல வருடங்களாக இந்த தோட்டத்தில் மின் வழங்கப்பட்டுள்ள மரத்திலான மின்கம்பங்கள் இத்துப்போய் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளன.
இது குறித்த நாங்கள் மின்சாரசபை அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பிரதேச சபை உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.அதனை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன் கொங்கிறீட் மற்றும் இருப்பிலான மின் கட்பங்களை நாட்டி விட்டு சென்றார்கள.; இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து எத்தனையோ தடைவைகள் அவர்களுக்கு தெளிவுபடுத்தியும் கூட இது வரை மாற்றவில்லை இதனால் பல மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. நாங்கள் வீடுகளில் இல்லாத போது இவை விழுந்தால் என்ன செய்வது எங்களுடைய பிள்ளைகள் என்ன செய்வார்கள்?வீடுகள் தீப்பிடிக்காதா? எனவே எதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் இவற்றினை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்பதனை நாங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்