இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரிக்காக பலாங்கொடை பெருந்தோட்ட கம்பெனியின் மூலம் கிடைக்கப்பெற்ற 5 ஏக்கர் காணியின் நில அளவை செயல்பாடுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து நில அளவை நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த மாதம் இடம்பெற்ற கடும் மழை காரணமாக குறித்த பாடசாலை மண்சரிவுக்கு உள்ளானதை தொடர்ந்து, கல்லூரியின் அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 5 ஏக்கர் காணியினை பெற்றுக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை சமூகத்தினர் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து வேண்டுகோள் முன் வைத்ததையடுத்து, பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அதன்படி குறித்த காணி அளப்பதற்கு தேவையான நில அளவை வேலைத்திட்டங்களை தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து இன்றைய தினம் 24/07/2021 வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நில அளவை செயற்பாடுகளை தொடர்ந்து காணிக்கான வேலியை அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ரூபன் பெருமாள் கருத்து தெரிவிக்கையில், இரத்தினபுரி தமிழ் சமூகத்திற்கு நீண்டகால குறைபாடாகக் காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலையொன்றை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கூடிய விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என உறுதியளித்தார்.
அதேவேளை, குறித்த காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்த பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் , காணி நில அளவை செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கையெடுத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதாக ரூபன் பெருமாள் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்