இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர்.

0
135

” நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ, சுமந்திரன்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் அட்டனில் இன்று (06.03.2022) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த எதிர்ப்பு போராட்டத்திலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து போராட்டத்திலும் பங்கேற்பதற்காகவே நாம் மலையகம் வந்துள்ளோம்.

நாட்டில் ஒருவரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்கச்சென்றாலும் ‘இல்லை’ என்ற பதிலே வழங்கப்படுகின்றது. அப்படியே பொருட்கள் இருந்தாலும் அவற்றின் விலை அதிகம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட எகிறியுள்ளன. நாட்டிலே பிரயாணம் செய்ய முடியவில்லை. வீட்டிலே சமைக்க முடியவில்லை.

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர். நாட்டு மக்களும் விழுந்துள்ளனர். இப்படியான ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடாது. மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார் சுமந்திரன்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here