சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான சர்வதேச போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதற்கமைய, கடந்த இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் சரிவை வெளிப்படுத்தி தோல்வியைத் தழுவக் காணரமாக இருந்த இலங்கை அணி வீரர்கள் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 66 (42), குசல் மெண்டிஸ் 54 (48), ஜனித் லியனகே 53 (52), கமிந்து மெண்டிஸ் 46 (71) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், மிச்சல் சேன்ட்னர் 2 விக்கெட்டுகளையும், மைக்கல் பிரேஸ்வல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.அந்த வகையில் 291 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட நியூஸிலாந்து அணி 29.4 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
அவ்வணி சார்பில் 2ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மார்க் சப்மன் 81 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவரைத் தவிர நாதன் ஸ்மித் 17 ஓட்டங்களையும் மைக்கல் பிரேஸ்வல் 13 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.இலங்கை அணி சார்பில் அசித்த பெனாண்டோ, மஹீஷ் தீக்ஷண, எஷான் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அந்த வகையில் இலங்கை அணி இத்தொடரின் 3ஆவது போட்டியை அபாரமாக வென்றுள்ளது.ஆயினும், 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ரி20 சர்வதேச போட்டித் தொடரை 2-0 என நியூஸிலாந்து அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.