அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியை குடியேற்ற அதிகாரிகள் 6 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மினியாபொலிஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி அன்று அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர், ரெனி குட் என்ற பெண்மணியை சுட்டுக்கொன்றனர். இது தேசிய அளவில் மக்களை கொதிப்படைய செய்தது. அதனால் அமெரிக்காவில் மக்கள் போராட்டம் ஏற்பட்டது. அந்த வகையில் மினியாபொலிஸ் பகுதியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியும் பங்கேற்றதாக தகவல். செவிலியராக மருத்துவமனை ஒன்றில் அவர் பணியாற்றி வந்தார். அப்போது அவரை குடியேற்ற அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் அலெக்ஸை சூழ்ந்த குடியேற்ற அதிகாரிகள், அவரை தரையில் தள்ளி, அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை பறித்தனர். அதன் பின்னர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து உடல் அசைவற்று அலெக்ஸ் காணப்பட்டார். அப்போதும் அவரை சூழ்ந்திருந்த அதிகாரிகள், துப்பாக்கியை அவரை நோக்கி குறி வைத்திருந்தனர்.
“அய்யோ… நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். யாரேனும் ஆம்புலன்ஸை கூப்பிடுங்கள். அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். என்னால் இதை நம்ப முடியவில்லை” என அந்த வீடியோவை படம் பிடித்த பெண் பதறுவதும் அதில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக வெளியான மற்றொரு வீடியோவில் துப்பாக்கி சூட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அதிகாரி ஒருவர் தரையில் தள்ளி உள்ளார். அந்த பெண்ணுக்கு அலெக்ஸ் உதவ சென்றுள்ளார். அப்போது அவரை பிடித்த அதிகாரிகள், அவரை தனியே இழுத்து வந்தனர். அதன் பின்னர்தான் அவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.




