உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு!

0
2

நுவரெலியா ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஒருவர் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது உலக முடிவு எனப்படும் உயரமான பாறை விளிம்பில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, திடீரென கால் தடுமாறி சுமார் 40 மீற்றருக்கும் அதிகமான ஆழமுள்ள பள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்ததும் இராணுவத்தினரும் வனவிலங்கு துறையினரும் விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 4,000 அடி ஆழம் கொண்ட செங்குத்தான மலைச்சரிவில் கடும் பனிமூட்டத்திற்கிடையில் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மாணவிகளை அந்த இடத்துக்கு கொண்டு சென்ற வாகன ஓட்டுனர் முதலில் துணிச்சலுடன் களமிறங்கி, கயிறுகளின் உதவியுடன் மரங்களுக்கிடையில் சிக்கியிருந்த மாணவியை உயிருடன் மீட்டார். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் கீழிறங்கிய இராணுவத்தினர் அவரை மேலே தூக்கி கொண்டு வந்தனர்.

காயங்களுடன் உயிர் தப்பிய அந்த மாணவி தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஒரு நிமிட கவனக்குறைவு, ஒரு வாழ்நாளின் முடிவாகிவிடலாம்” என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக முடிவு பகுதியில் பலத்த காற்றும் வழுக்கும் தன்மையும் காணப்படுவதால், பாறை விளிம்புகளில் நின்று புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here