உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

0
41

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் அதுகுறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதன் காரணமாக வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கடந்த மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன்உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசித்துவருவதாகவும் தற்போது வரை தேர்தலை நடாத்துவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தவேண்டியிருக்கும் எனவும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் அத்தகைய சூழ்நிலையில் முதலில் நாடாளுமன்றத் தேர்தலையும், தாமதமின்றி அடுத்ததாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் நடாத்துவது குறித்து ஆணைக்குழு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here