நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் வாரத்தில் மின்வெட்டு காலத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் நேற்று சனிக்கிழமை மீண்டும் இணைக்கப்பட்டதன் மூலம் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது இயந்திரம் பழுதடைந்ததாலும், அதனைத்தொடர்ந்து 2வது இயந்திரம் பழுதாகி நின்றதாலும், கடந்த 15ம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்தடை மேற்கொள்ளப்படுகின்றது.
இதேவேளை, மின்வெட்டு நேரம் குறைவடைந்துள்ளதா என்பதை அறிவிக்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த இலங்கை மின்சார சபை, மின்வெட்டு காலத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உடனடியாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு அளவு மற்றும் நீர் மின் நிலையங்களின் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அது குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.