எரிபொருள் விலையேற்றங்களால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு தடவைகள் அரசாங்கம் எரிபொருள் விலையை இரட்டை இலக்க விலைகளால் உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எரிபொருள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் தவறானதொன கடந்த காலத்தில் ஐ.தே.க கட்டிக்காட்டியது. அதனை பொருட்படுத்தாது நடந்துக்கொண்டமையால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எரிப்பொருள் விலையேற்றத்தால் நாட்டின் அனைத்து பொருட்;களினதும் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும். மரக்கறிகல் முதல் அத்தியாவசியப் பொருட்கள்வரை அனைத்தினதும் விலைகளும் ஏற்கனவே, உச்சம் தொட்டுவிட்டன. இவ்வாறான பின்புலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பானது மேலும் பாரிய வாழ்க்கை சுமையை மக்களுக்கு ஏற்படுத்தும்.
இந்த அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான பொருளாதாரக் கொள்கைகளை கைவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவராகவுள்ள ஐ.தே.கவின் தலைவர் உட்பட அனைத்துக் கட்சியினரதும் கருத்துகளை செவிமடுத்து மக்களுக்கு சாதகமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். தொடர்ந்து எதேச்சகரமாகச் செயல்பட்டால் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிபொருள் விலை தொடர்;ச்சியாக அதிகரிப்பது பொருளாதார ரீதியில் பலம் குறைந்தவர்களாகவும் அன்றாட வருமானத்தை நம்பியவர்களாகவும் வாழும் மலையக மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இவர்களது மாதச் சம்பளத்தில் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது?. உடனடியாக அனைத்துத் தோட்டங்களிலும் ஆயிரம் ரூபா நாள் சம்பளத்துக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.