இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும் கூறியுள்ளார்.
ஏனைய 18 துப்பாக்கிச் சூடுகள் மற்ற நபர்களால் நடத்தப்பட்டவை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நடந்தவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
68 துப்பாக்கிச் சூடுகளில் 37 பேர் இறந்துள்ளதாகவும், அவற்றில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவற்றில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக பொலிஸார் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளில் 23 T-56 துப்பாக்கிகள், 46 கைத்துப்பாக்கிகள் மற்றும் 1,165 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவித்தார்.
மேலும், 68 துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக 24 பேரும், ஓட்டுநர்களாகச் செயல்பட்ட 15 பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்