“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் பட்ஜெட் – நாமல் விசனம்!

0
47

“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில்தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்.”

இவ்வாறு அரசிடம் வலியுறுத்தினார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து சுமார் 4.30 மணித்தியால வரலாற்றுச் சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனை மிக்க என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆழமாக ஆராய வேண்டும்.

2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு – செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது. ஆனால், இந்த வரவு – செலவுத் திட்டம் ஏழைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகின்றது.

பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நாங்கள் எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடந்த அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்கள்தான் எதிர்ப்புத் தெரிவித்தது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பேசிய விடயங்களைக் ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

உங்களைப் போன்று வைராக்கியத்துடன் நாங்கள் செயற்படப் போவதில்லை. அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here